குழந்தைகளுக்கான வங்கி கணக்கு: நடைமுறைகள்
- வங்கி கணக்கை குழந்தைகள் தனித்து இயக்க முடியும்.
- கட்டுப்பாடுகளை கொண்ட சேமிப்பு கணக்கை தேர்வு செய்யுங்கள்.
சிறுவயதிலேயே வங்கியில் சேமிப்பு கணக்கை தொடங்கி அதை முறையாக செயல்படுத்துவதன் மூலம் குழந்தைகள் பணத்தை பொறுப்பாக கையாள்வதற்கு கற்றுக் கொள்வார்கள். வங்கிக்கணக்கை பெற்றோரின் உதவியுடன் கையாள்வதன் மூலம் சேமிப்பு மற்றும் நிதி மேலாண்மை பற்றி தெரிந்து கொள்ளவும் முடியும். குழந்தைகள் அவர்களுக்கான எதிர்கால நிதி இலக்குகளை அடைவதற்கும் இது உதவி செய்யும்.
உங்கள் குழந்தைகளுக்கான வங்கி கணக்கை தொடங்குவதற்கு முன்பு, அவற்றின் அம்சங்களையும், நன்மைகளையும் கருத்தில் கொள்வது முக்கியமானது.
குழந்தைகளுக்கான வங்கி கணக்கில் 10 வயதுக்கு உட்பட்டவர்களுக்கானது, 10 முதல் 18 வயது உள்ளவர்களுக்கானது என இரண்டு வகைகள் உள்ளன. இதில் முதல் வகை வங்கி கணக்கை, குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலருடன் சேர்ந்து கூட்டாக மட்டுமே இயக்க முடியும். இரண்டாவது வகை வங்கி கணக்கை குழந்தைகள் தனித்து இயக்க முடியும்.
குழந்தைகளுக்கான சேமிப்பு கணக்கை தேர்ந்தெடுக்கும்போது பின்பற்ற வேண்டிய விஷயங்கள்:
* பெற்றோர் அல்லது பாதுகாவலரின் நிர்வாகத்தின் கீழ் இருக்கும் வகையில், குழந்தைகளுக்கான வங்கிக் கணக்கை தொடங்கலாம். குழந்தைகள் வங்கிக்கணக்கை பாதுகாப்பாக கையாளவும், தவறான வழியில் பயன்படுத்தாமலும் இருக்க வங்கிக்கணக்கில் குறிப்பிட்ட தொகையை நிலுவைத் தொகையாக செலுத்தி நிர்வகிக்கலாம். இது அவர்கள் பணத்தை அதிகமாக செலவழிப்பதை தடுக்க உதவும்.
• வங்கிக்கணக்குக்கான பாஸ்புக், காசோலை புத்தகம், ஏ.டி.எம். கார்டு ஆகியவை இருந்தாலும், குழந்தைகள் அதை பெற்றோரின் ஒப்புதலுடன் மட்டுமே எடுத்து பயன்படுத்தும்படியான கட்டுப்பாடுகளை கொண்ட சேமிப்பு கணக்கை தேர்வு செய்யுங்கள்.
• குழந்தைகளுக்கான வங்கி கணக்குகளுக்கும் இணையவழி சேவை உள்ளது. ஆனால், அதை பெறுவதற்கு வங்கியில் பெற்றோரின் ஒப்புதல் அவசியமானது. முடிந்தவரை குழந்தையின் சேமிப்பு கணக்குக்கு இணையவழி சேவையை தவிர்ப்பது நல்லது.
* உங்கள் குழந்தைகளுக்காக நீங்கள் தேர்ந்தெடுக்கும் சேமிப்பு கணக்கானது, அவர்கள் 18 வயதை அடைந்தவுடன் தன்னிச்சையாகவே தனிநபர் சேமிப்பு கணக்காக மாறும்படி இருப்பது சிறந்தது. இது உங்கள் பிள்ளைகளின் எதிர்கால வங்கிக்கடன் மற்றும் பல்வேறு பயன்பாட்டுக்கு உதவியாக இருக்கும்.
* உங்கள் குழந்தையின் வங்கிக்கணக்கில் நிகழும் பண பரிவர்த்தனைகள் அனைத்தும் எப்போதும் உங்களுடைய கவனத்துக்கு வரும் வகையில் அவர்களின் வங்கிக்கணக்குடன் தொலைபேசி எண்ணை இணைத்திடுங்கள்.
* உங்கள் குழந்தைகளுக்கு குறைந்தபட்ச இருப்புத்தொகை கொண்ட வங்கிக்கணக்கை தேர்ந்தெடுக்கலாம். இது குழந்தைகள் அதிகமாக பணம் செவவழிப்பதையும், இருப்புத்தொகை குறைவதன் காரணமாக விதிக்கப்படும் அபராதத்தையும் தவிர்க்க உதவும்.