குழந்தை பராமரிப்பு

குழந்தைகளுக்கான அடிப்படை வாழ்வியல் பாடங்கள்

Published On 2024-06-30 03:13 GMT   |   Update On 2024-06-30 03:13 GMT
  • பிறருடைய உணர்வுகளை மதிப்பதற்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.
  • குழந்தைகள் தங்கள் உணர்ச்சிகளை நிர்வகிக்க கற்றுக்கொடுக்க வேண்டும்.

மழலை பருவத்தின்போதே குழந்தைகளிடம் சின்ன சின்ன வாழ்வியல் விஷயங்களை கற்றுக்கொடுத்துவிட வேண்டும். அவற்றை அவர்கள் பின்பற்றுவதற்கும் பெற்றோர் வழிகாட்டியாக இருக்க வேண்டும். அப்படி ஆரம்பக்கட்டத்திலேயே கற்றுக்கொடுக்க வேண்டிய அடிப்படை வாழ்வியல் பாடங்கள் இவை..

முழு கவனத்துடன் கேட்கும் கலை

மற்றவர்கள் பேசும்போது அதை கவனமாகக் கேட்பதற்கு கற்றுக் கொடுக்க வேண்டும். பேசுபவர்களின் கண்களை பார்த்தபடி கேட்பது, அவர்களின் பேச்சில் குறுக்கிடாமல் இருப்பது, அவர்கள் பேசும் விஷயத்தை மனதில் பதியவைப்பது போன்ற விஷயங்களை சொல்லிக்கொடுக்க வேண்டும். அதன்படி செயல்படுகிறார்களா? என்பதையும் பெற்றோர் கவனிக்க வேண்டும். அப்படி முழு கவனத்துடன் கேட்கும் கலையை வளர்த்துக்கொள்வது பிறருக்கு மரியாதை கொடுப்பதற்கும், தகவல் தொடர்பை வளர்த்துக்கொள்வதற்கும் வழிவகுக்கும்.

மதிக்கும் பண்பு

பெற்றோர்கள், ஆசிரியர்கள், மூத்தவர்கள், அதிகாரிகள் போன்றவர்களை மதிக்க கற்றுக்கொடுக்க வேண்டும். அதனை பின்பற்றுவது, பிறருக்கு உரிய மரியாதையை கொடுக்கும் பண்பை குழந்தை பருவத்திலேயே வளர்த்துக்கொள்ள வழிகாட்டும்.

அட்டவணை

அன்றாடம் செய்யும் விஷயங்களை முறையாக மேற்கொள்வதற்கு அட்டவணை தயாரிக்கவும், திட்டமிடவும் கற்றுக்கொடுக்க வேண்டும். சாப்பிடும் நேரம், வீட்டுப்பாடம் செய்யும் நேரம், விளையாடும் நேரம், தூங்கும் நேரம் என எல்லாவற்றையும் அட்டவணைப்படுத்தி அதன்படி அவர்கள் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும். இந்த நடைமுறை, ஒழுக்கத்தையும் பொறுப்புணர்வையும் வளர்க்க உதவும்

நாகரிகமான சொற்கள்

சிறு வயதில் இருந்தே, 'தயவுசெய்து', 'நன்றி', 'தவறு செய்திருந்தால் என்னை மன்னிக்கவும்' போன்ற நாகரிகமான சொற்களை உபயோகிக்க கற்றுக்கொடுக்க வேண்டும். இவை பிறரிடத்தில் மரியாதைக்குரிய தொடர்புகளை வளர்த்துக்கொள்ளவும், சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கும் உதவும்.

பொறுப்பு ஏற்பது

குழந்தைகள் தாங்கள் செய்யும் செயல்களுக்கு தாங்களே முழு பொறுப்பையும் ஏற்க கற்றுக்கொடுக்க வேண்டும். சந்திக்கும் எதிர் விளைவுகளை புரிந்துகொண்டு செயல்படுவதற்கும், தவறுகளை திருத்திக்கொள்வதற்கும், தீர்க்கமாக முடிவெடுக்கும் திறனை வளர்த்துக்கொள்வதற்கும் வித்திடும்.

மற்றவர்களுக்கு உதவுவது

பெற்றோருக்கு வீட்டு வேலைகளில் உதவுவது, வகுப்புத் தோழர்களுக்கு தக்க சமயத்தில் உதவுவது, கருணை காட்டுவது என உதவும் பண்பை கற்றுக்கொடுக்க வேண்டும். அக்கறை மனப்பான்மையை வளத்துக்கொள்வதற்கு இந்த நடத்தைகள் உதவும்.

சுயக்கட்டுப்பாடு

குழந்தைகள் தங்கள் உணர்ச்சிகளை நிர்வகிக்க கற்றுக்கொடுக்க வேண்டும். பொறுமையுடன் காத்திருப்பது, விரக்தியை சுமுகமாக கையாள்வது, சுய ஒழுக்ககத்தை பின்பற்றுவது என சுயக்கட்டுப்பாட்டுடன் செயல்படுவதற்கு வழிகாட்டும்.

நேர்மையை கடைப்பிடித்தல்

எந்தவொரு சூழலிலும் நேர்மையாக செயல்பட சொல்லிக்கொடுக்க வேண்டும். அது உண்மையை சொல்லவும், வெளிப்படைத்தன்மையுடன் இருக்கவும் வழிவகை செய்யும்.

பின்பற்றுதல்

பெற்றோர் சொல்லும் வேலைகள், அறிவுறுத்தல்களை உடனடியாக பின்பற்றுவதற்கும் சொல்லிக்கொடுக்க வேண்டும். இந்த பழக்கம் பணிகளை உடனடியாக முடிப்பதன் முக்கியத்துவத்தை புரிந்துகொள்ள உதவும். கொடுத்த வேலைகளை உடனடியாக செய்து முடிக்கும் நபர் என்ற நம்பகத்தன்மையை பிறர் மத்தியில் ஏற்படுத்தவும் செய்யும்.

பிறர் உணர்வுகளை மதிப்பது

பிறருடைய உணர்வுகளை மதிப்பதற்கு கற்றுக்கொடுக்க வேண்டும். அவர்களின் மனக்குமுறல்களை அனுமதியாக கேட்கவும், உள்ளுணர்வுகளை புரிந்து கொள்ளவும் வழிவகை செய்யும்.

Tags:    

Similar News