குழந்தை பராமரிப்பு

குழந்தைகளுக்கு அடிக்கடி சிப்ஸ் வாங்கி கொடுக்கலாமா...?

Published On 2024-04-24 10:22 GMT   |   Update On 2024-04-24 10:22 GMT
  • சிப்ஸ் குழந்தைகளை அதிகம் கவர்கிறது.
  • சிப்ஸ் கொறிப்பதால் ஏற்படும் சிக்கல்கள்.

கவர்ச்சிகரமான 'பேக்கிங்'கில், மொறு மொறு சுவையுடன் வரும் 'சிப்ஸ்',' குழந்தைகளை அதிகம் கவர்கிறது. பிள்ளைகள் நச்சரிக்கிறார்கள் என்று பெற்றோரும் அவர்களுக்கு அடிக்கடி 'சிப்ஸ்' வாங்கி கொடுக்கிறார்கள். இது சரியா? அடிக்கடி 'சிப்ஸ்' கொறிப்பதால் ஏற்படும் சிக்கல்கள் என்னென்ன என்று தெரியுமா?

பொதுவாகவே, சிப்ஸ் கெட்டுப்போகாமல், பிரெஷ்சாக இருக்க அதில் அதிகம் உப்பு சேர்க்கப்படுகிறது. இவ்வாறு உப்பு அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட்டால் உயர் ரத்தஅழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

மேலும், 'சிப்ஸ்' தயாரிப்பில் பயன்படுத்தப்படும் எண்ணெய் ஆரோக்கியத்தில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்துகிறது.

சிப்சில் உள்ள டிரான்ஸ் பேட், கொலஸ்டிராலை அதிகரிக்கிறது. இதனால் தமனிகளில் ரத்த ஓட்டம் தடைபடுகிறது. இதன் காரணமாக, பிற்காலத்தில் இதய பிரச்சினைகள் ஏற்படலாம்.

அதுமட்டுமின்றி சிப்ஸ், உடலில் ஆரோக்கியமற்ற கொழுப்பை ஏற்படுத்துகிறது. இதனால் குழந்தைகளின் எடை கூடும். உடல் பருமன் பிரச்சினை உண்டாகும்.

 அதுபோல் சிப்சில் கலோரிகள் அதிகம். எனவே இதை குழந்தைகள் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும். அதோடு குழந்தைகளுக்கு மலச்சிக்கல் பிரச்சினைகளை உண்டாக்கலாம், இன்னும் பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

முக்கியமாக, குழந்தைகள் அளவுக்கு அதிகமாக சிப்ஸ் சாப்பிட்டால் புற்றுநோய் அபாயத்துக்கு உள்ளாகலாம். அவர்களுக்கு பிற்காலத்தில் மலட்டுத்தன்மை பிரச்சினையை உண்டாக்கலாம்.

அதுபோல குழந்தைகளுக்கு வாயு மற்றும் செரிமான பிரச்சினைகளை ஏற்படுத்துவதுடன், அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியையும் கொஞ்சம் கொஞ்சமாக குறைக்குமாம்.

இவ்வளவு பிரச்சினை ஏற்படுத்தக்கூடிய சிப்சை நமது குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்கலாமா என்று அடுத்தமுறை ஒரு தடவைக்கு இரு தடவை யோசித்திடுங்கள்.

Tags:    

Similar News