குழந்தை பராமரிப்பு

பிஸ்கெட் அதிகம் சாப்பிடும் குழந்தைகளுக்கு இந்த பிரச்சனைகள் வரலாம்...

Published On 2023-06-20 07:22 GMT   |   Update On 2023-06-20 07:22 GMT
  • குழந்தைகளுக்கு பிஸ்கெட் கொடுத்து பழக்கப்படுத்துவது மிகவும் தவறு.
  • வாரம் ஓரிரு முறை பிஸ்கெட் சாப்பிடுவதில் தவறு இல்லை.

சர்க்கரை, கொழுப்பு, டிரான்ஸ்ஃபேட் அமிலங்கள் போன்றவை பிஸ்கெட்டில் அதிகம் இருக்கின்றன. பிஸ்கெட் தயாரிப்பின்போது அதிக வெப்பநிலையில் எண்ணெய், டால்டாபோன்றவற்றை சூடுபடுத்தும்போது உருவாகும் இந்த டிரான்ஸ்ஃபேட் அமிலங்கள் எத்தனை சதவிகிதம் இருக்கின்றன என்பதை அதன் உறையில் பெரும்பாலும் குறிப்பிடுவதில்லை. இந்த அமிலங்கள் உடலில் அதிகம் சேர்ந்தால் கொழுப்பின் அளவு அதிகமாகி இதய நோய்கள் உருவாகும் அபாயம் உண்டு. சர்க்கரை, கொழுப்பு பற்றி சொல்ல வேண்டியதே இல்லை.

குழந்தைகளுக்கு பிஸ்கெட் கொடுத்து பழக்கப்படுத்துவது மிகவும் தவறு. சுவையாக இருக்கிறது என்பதால் 4-5 பிஸ்கெட்டுகளுக்கு மேல் சாப்பிட்டு விடுவார்கள். இதனால் வயிறு நிறைய சாப்பிட்ட உணர்வு உண்டாகி, சாப்பாடு வேண்டாம் என்பார்கள்.

பிஸ்கெட்டின் இனிப்புச் சுவை பழகி, காரம், கசப்பு, புளிப்பு, உவர்ப்பு போன்ற மற்ற சுவைகள் பிடிக்காமல் போய்விடும். காய்கறிகள், பருப்பு வகைகள், பழங்கள் ஆகியவற்றை குழந்தைகள் வெறுப்பதற்கும் இது முக்கிய காரணம். இதே வழியில் சாக்லெட், ஐஸ்க்ரீம் என்று இனிப்பு வகைகளையே கேட்டு அடம்பிடிப்பதும் நடக்கும். பிஸ்கெட் சாப்பிட்ட பிறகு பெரும்பாலான குழந்தைகள் வாய் கொப்புளிப்பதும் இல்லை. இதனால் பல் சொத்தை உருவாவதையும் பார்க்கிறோம்.

முக்கியமாக, குழந்தைகளின் செரிமான சக்திக்கு ஏற்ற உணவு பிஸ்கெட் அல்ல. நீர்ச்சத்தை அதிகம் உறிஞ்சும் தன்மையும் பிஸ்கெட்டுக்கு இருப்பதால் மலச்சிக்கலும் எளிதில்உண்டாகும்.

வாரம் ஓரிரு முறை பிஸ்கெட் சாப்பிடுவதில் தவறு இல்லை. ஆனால், உணவுக்கு மாற்றாகவோ அல்லது அளவுக்கு அதிகமாகவோ பிஸ்கெட்டை பயன்படுத்துவது ஆரோக்கியமானது அல்ல. உடல்நலம் இல்லாதவர்கள் எந்த உணவும் சாப்பிட முடியாத பட்சத்தில் பிஸ்கெட் சாப்பிடுவது உடலுக்குத் தெம்பளிக்கும். அதற்காக, பிஸ்கெட்டை சிறந்த மாற்று உணவாக நினைக்கக் கூடாது. பிஸ்கெட்டுக்கு பதிலாக பழங்கள், சுண்டல், ஓட்ஸ் என்று ஆரோக்கியமான உணவுகளை உடல்நலம் சரியில்லாதவர்கள் சாப்பிடப் பழக வேண்டும்.

எத்தனை பிஸ்கெட் சாப்பிட்டால் குறிப்பிட்டிருக்கும் சத்துகள் நமக்கு கிடைக்கும் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு பாக்கெட் பிஸ்கெட் சாப்பிட்டால் ஒரு டம்ளர் பால் சாப்பிடுவதற்கு சமம் என்றால், அதற்கு ஒரு டம்ளர் பாலே சாப்பிட்டுவிடலாம்..

Tags:    

Similar News