குழந்தைகளை குறைத்து மதிப்பிடுதல் கூடாது
- பெற்றோர்கள் அவர்களது உள்ளுணர்வை வைத்து குழந்தைகளை வளர்ப்பார்கள்.
- குழந்தைகளை அவர்களாகவே வளர விட வேண்டும் என்பதில் பெற்றோருக்கு கவனம் தேவை.
புதிதாக பெற்றோர்களாகி இருப்பவர்களும் சரி, சில ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோராகி இருப்பவர்களும் சரி. அவர்கள் செய்ய நினைக்கும் ஒரே விஷயம், `தங்கள் குழந்தைகளை முறையாக வளர்க்க வேண்டும்' என்பதுதான். இதற்கு காரணம், நமக்கு பெற்றோர்களாக இருந்தவர்கள் செய்த தவறை நாம் நமது பிள்ளைகளுக்கு செய்து விட கூடாது எனும் எண்ணம் மேலோங்கி உள்ளதால் தான். சரி, இப்போதைய இளம் தலைமுறை பெற்றோருக்கு ஏற்ற சில டிப்ஸ்கள் என்னென்ன? இங்கே பார்ப்போம்.
பெற்றோர்கள் அவர்களது உள்ளுணர்வை வைத்து குழந்தைகளை வளர்ப்பார்கள். இந்த முறையில் பிள்ளைகளை வளர்க்கும் பெற்றோர் அவர்களுக்கு ரூல்ஸ் போடுவது,, சில பழக்க வழக்கங்களை அவர்களுக்கு சொல்லி கொடுப்பது போன்ற விஷயங்களை செய்வர். இந்த முறையில் பிள்ளைகளை வளர்ப்பது நண்மைதான் என்றாலும், குழந்தைகள் வளர்ந்தவுடன் அவர்களுக்கான சுய அடையாளத்தை மறந்து முழுக்க முழுக்க தங்களது பெற்றோர் சொல்லிக்கொடுத்தபடி ரூல்சில் வாழ வேண்டியதாக இருக்கும். ஆகையால், எதில் விதிமுறை இருக்க வேண்டும், எதில் குழந்தைகளை அவர்களாகவே வளர விட வேண்டும் என்பதில் பெற்றோருக்கு கவனம் தேவை.
உங்கள் குழந்தைகளை நீங்கள் எப்படி வளர்த்திருக்கிறீர்களோ, அதை பொறுத்துதான் அவர்களது நம்பிக்கை அதிகரிக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. குறிப்பாக, குழந்தைகளிடம் பேசும்போது எப்போதுமே எதிர்மறை கருத்துக்களை குறைத்து கொண்டு நேர்மறையான கருத்துக்களுடன் பேச வேண்டும். நீங்கள் என்ன பேசுகிறீர்கள் என்பதை உன்னிப்பாக கவனிக்கும் பிஞ்சு மனங்களில் உங்கள் வார்த்தைகள் ஆழமாக பதியும். ஆகவே, உங்கள் வார்த்தைகள் மதிப்பு மிகுந்தவையாக இருக்க வேண்டும்.
குழந்தைகளை குறைத்து மதிப்பிதல் கூடாது
உங்களுடைய குழந்தைகளுக்கும் உணர்வுகள் இருக்கும். உங்களை அவமானப்படுத்தும்பொழுது உங்களுக்கு எவ்வாறு வலிக்குமோ அதுபோல் தான் உங்களுடைய குழந்தைகளுக்கும் வலிக்கும். இதை தான் சைல்டு ஷேமிங் என்கிறோம். முதலாவது ஒரு குழந்தையை பார்த்து உனக்கு ஒரு மண்ணும் தெரியாது. உனக்கு ஒன்னும் தெரியாது. உனக்கென்ன தெரியும் என்று அவர்களை குறைவாக மதிப்பிடுவது.
இரண்டாவது நல்ல குழந்தைகளுக்கு எல்லாம் தெரியும். உன்னைவிட உன்னுடைய நண்பர்கள் ஒரு செயலை நன்றாக செய்கின்றனர் என்று உங்கள் குழந்தையை மற்ற குழந்தையுடன் ஒப்பிட்டு பார்த்து கூறுவது. அதற்கு அவர்கள் திருப்பி நம்மிடம் (பெற்றோர்) என் ஃபிரண்டோட அம்மா டாக்டர், என்ஜினீயர், வசதியாக இருக்கிறாங்க நீங்க மட்டும் ஏன் இப்படி இருக்கீங்க என்று அவர்கள் கேட்டால் நம்மிடம் எந்த பதிலும் இருக்காது.
மூன்றாவது வயதை வைத்து ஒப்பிட்டு காட்டுவது. அதாவது மற்ற குழந்தைகளுக்கு முன்னாள் அவர்களை தரக்குறைவாக மதிப்பிடுவது, 8 வயதாகிறது இதுகூட தெரியாதா? எருமைமாடு வயதாகிறது உனக்கு இதுகூட தெரியலையா? என்று வயதுக்கு மூத்தவர்களுடன் குழந்தைகளை ஒப்பிட்டு கூறுவது.
பாலினத்தை குறிப்பிட்டு குழந்தைகள் முன்னாள் பேசக்கூடாது. ஆண்பிள்ளை அழக்கூடாது. பெண் குழந்தை தான் வீட்டு வேலைகளை செய்ய வேண்டும் என்று பாலினத்தை குறிப்பிட்டு குழந்தைகள் முன்னாள் பேசக்கூடாது.