குழந்தைகளின் உணவிலும் அதிக அக்கறை வேண்டும்...!
- `ஜங்க் புட்' பண்டங்கள் எந்தச் சத்துகளையும் தருவதில்லை.
- காலை 7 முதல் 9 மணி வரை சிறுகுடல் ஆற்றலுடன் இயங்கும் நேரம்.
குழந்தைகளின் உடல்நலனில் பெற்றோர் கண்டிப்பாக அக்கறை காட்ட வேண்டும். காலை 7 முதல் 9 மணி வரை சிறுகுடல் ஆற்றலுடன் இயங்கும் நேரம். அந்த நேரத்தில் கடனே என உணவு திணிக்கப்பட்டால், அது ஒட்டுமொத்த உடலையும் கண்டிப்பாக பாதிக்கும். சரி, காலை உணவுதான் பொருத்தமாக இல்லை. மதிய உணவாவது முழு ஆற்றலை வழங்கக்கூடியதாக இருக்கிறதா என்றால், பெரும்பாலான குழந்தைகளுக்கு அதுவும் இல்லை.
காய்கறி, கீரை நல்ல உணவு என்று சொல்லி தலையணைக்குள் பஞ்சை திணிப்பதுபோல, குழந்தைகளின் வாயில் அவற்றை மட்டும் திணிக்க முயற்சிக்கக் கூடாது.
அதே நேரத்தில் பளபளப்பான பாலித்தீன் பாக்கெட்டுகளில் வரும் பண்டங்களை குழந்தைகள் விரும்புகிறார்களே, அது சரியா என்ற கேள்வியும் எழுகிறது. சரியல்லதான்.
`ஜங்க் புட்' எனப்படும் இந்த வணிகப் பண்டங்கள் எந்தச் சத்துகளையும் தருவதில்லை. குழந்தைகளின் மென்மையான உள்ளுறுப்புகளை மோசமாகச் சிதைத்து நிரந்தர நோயாளிகளாக்கி விடக்கூடும். வேறு நல்ல பண்டங்களை உண்ண விடாத அளவுக்கு நாவின் சுவை மொட்டுகளை இவ்வகை பண்டங்கள் சுரண்டி கெடுத்துவிடுகின்றன.
வணிக நொறுக்குத்தீனி பண்டங்களில் இருந்து குழந்தைகளை மீட்டெடுப்பது எப்படி? என்று பெற்றோர் கூடுதல் அக்கறையுடன் சிந்தித்து, செயல்பட வேண்டி இருக்கிறது. இயற்கையான, சத்தான, விதவிதமான சுவை கொண்ட உணவை பச்சிளம் பருவத்தில் இருந்தே குழந்தைகளுக்கு பழக்கினால் வணிகப் பண்டங்களுக்கு அவர்கள் அடிமையாக மாட்டார்கள், என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.