குழந்தை பராமரிப்பு

குழந்தைகள் நகம் கடிக்கிறதா? உஷார்...!

Published On 2023-10-30 08:12 GMT   |   Update On 2023-10-30 08:12 GMT
  • சிலருக்கு மரபியல் ரீதியாகவும் இந்த பழக்கம் ஏற்படக்கூடும்.
  • அத்தகைய நடத்தைக்கான அடிப்படை காரணங்களைக் கண்டறியுங்கள்.

தங்களுடைய குழந்தைகள் அடிக்கடி நகம் கடித்திறார்கள் என்று பல பெற்றோர்கள் வருத்தப்படுவார்கள். 30 முதல் 60 சதவிகிதம் குழந்தைகளுக்கு நகம் கடிக்கும் பழக்கம் இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. புதியவற்றை தெரிந்துகொள்ளும் ஆர்வம், சலிப்பு, மன அழுத்தம், மற்றவரைப் பார்த்து தானும் செய்வது போன்ற காரணங்களால், குழந்தைகளுக்கு நகம் கடிக்கும் பழக்கம் உண்டாகலாம் என்று உளவியல் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். சிலருக்கு மரபியல் ரீதியாகவும் இந்த பழக்கம் ஏற்படக்கூடும்.

நாளடைவில் பெரும்பாலான குழந்தைகளிடம் இந்த பழக்கம் மறைந்துவிடும். ஆனால் சிலருக்கு பெரியவர்கள் ஆனாலும் இது தொடர்கதையாகவே நீடிக்கும். அந்த வகையில் குழந்தைகளின் நகம் கடிக்கும் பழக்கத்தை தடுப்பது பற்றிய சில விஷயங்கள்.

குழந்தைகளிடம் இருந்து ஒரு பழக்கத்தை நிறுத்துவதற்கு முயற்சி செய்வதற்கு முன்பு அவர்களின் அத்தகைய நடத்தைக்கான அடிப்படை காரணங்களைக் கண்டறியுங்கள். வளரும்போது பல குழந்தைகளுக்கு சூழ்நிலை காரணாமாக பதற்றம் மற்றும் மன அழுத்தம் ஏற்படுகிறது ஆனால் பெற்றோரால் இதை உணர முடிவது இல்லை.

பெற்றோருக்கு இடையே நடக்கும் சண்டை, புதிய வகுப்பு சூழ்நிலை, தேர்வு பதற்றம் ஆகியவை கூட அவர்களுக்கு இந்த பழக்கத்தை ஏற்படுத்தி இருக்கலாம். எனவே காரணத்தை முதலில் தெரிந்து கொண்டு அதற்கான தீர்வை கண்டறியுங்கள். உங்கள் குழந்தைக்கு `நகம் கடிப்பது தவறான பழக்கம்' என்பதை சுட்டிக்காட்டி புரிய வையுங்கள். நகம் கடிப்பதால் ஏற்படும் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சினைகளைப் பற்றி அவர்களிடம் கூறி விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.

கைகளை பல இடங்களில் தொட்டு விட்டு, வாயில் வைத்து கடித்தால் கிருமித்தொற்று ஏற்படும் என்பதை விளக்குங்கள். ஒவ்வொரு முறை குழந்தைகள் நகத்தை கடிக்கும் போதும் அவர்களை சுதாரிப்படையச் செய்யுங்கள். இதன் மூலம் காலப்போக்கில் நகம் கடிக்கும் பழக்கம் மறைந்துவிடும்.

குழந்தைகளின் ஓய்வு நேரத்தில் அவர்களுக்குப் பிடித்த பொழுதுபோக்குகளில் ஈடுபட அனுமதியுங்கள். இதன் மூலம் சலிப்பு காரணமாக அவர்களுக்கு நகம் கடிக்க வேண்டும் என்ற எண்ணம் வராது. நகம் கடிக்கும் பழக்கத்தை குறைத்தால், அதை ஊக்குவிக்கும் வகையில் சிறு சிறு பரிசுகள் கொடுத்து பாராட்டுங்கள்.

நகம் கடிக்கும் குழந்தைகளை அன்பால் மட்டுமே திருத்த முயற்சிக்க வேண்டும். கண்டிப்பு காட்டுவது, அவர்களுக்கு மேலும் மன அழுத்தத்தை உண்டாக்கி நகம் கடிக்கும் பழக்கத்தை தீவிரப்படுத்தும்.

குழந்தையின் நகம் கடிக்கும் பழக்கம். அதிகமானாலோ, அதனால் விரல்களில் காயங்கள் ஏற்பட்டாலோ, குழந்தையின் நகம் சீரற்று இருந்தாலோ, உளவியல் ஆலோசகரிடம் அழைத்துச்செல்லது நல்லது.

Tags:    

Similar News