குழந்தை பராமரிப்பு

மாணவர்களை அதிக நேரம் படிக்கத் தூண்டும் பழக்கங்கள்

Published On 2024-03-03 09:40 GMT   |   Update On 2024-03-03 09:40 GMT
  • படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவதன் மூலம் அதிக மதிப்பெண்களை பெற முடியும்.
  • குறிப்பிட்ட நேரம் படிக்கும் வழக்கத்தை பெற்றோர் பின்பற்ற வைக்க வேண்டும்.

இது தேர்வுக்கான காலகட்டம். மற்ற சமயங்களை விட படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவதன் மூலமே அதிக மதிப்பெண்களை பெற முடியும் என்பதை மாணவர்கள் உணர்ந்து செயல்படுவார்கள். ஒருசில பழக்க வழக்கங்களை தினமும் பின்பற்ற வைப்பதன் மூலம் அவர்களின் கல்வித்திறன் மேம்படுவதோடு வாழ்நாள் மூலம் கற்றல் மீதான நாட்டத்தை மெருகூட்ட செய்யலாம். அதற்கான வழிமுறைகள்...

தேர்வு சமயங்களை தவிர்த்து தினமும் குறிப்பிட்ட நேரம் படிக்கும் வழக்கத்தை பெற்றோர் பின்பற்ற வைக்க வேண்டும். அந்த சமயத்தில் வேறு எந்த செயலிலும் கவனம் செலுத்த அனுமதிக்கக்கூடாது. `இது படிப்புக்கான நேரம்' என்பது மனதில் ஆழமாக பதிய வேண்டும். அப்படி குறிப்பிட்ட நேரத்தில் தொடர்ந்து படிப்பதன் மூலம் கற்றலை வலுப்படுத்தும் பழக்கத்தை மாணவர்கள் வளர்த்துக் கொள்வார்கள்.

 அமைதியான இடம்

கவனச்சிதறல்கள் மாணவர்களை தடம் புரளச் செய்யும். எனவே இடையூறு ஏதும் இல்லாமல், படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தக்கூடிய அமைதியான இடத்தை ஒதுக்கிக்கொடுக்க வேண்டும். அமைதியான சூழல் கவனத்தை ஒன்றிணைக்கும் திறனை வலுப்படுத்தும். புரிதலை மேம்படுத்தும்.

கற்றல் நுட்பங்கள்

எந்த பாடத்தையும் மனப்பாடம் செய்து படிக்கக்கூடாது. ஒரு பாடத்தை படிப்பதற்கு முன்பு அதில் இடம் பெற்றுள்ள முக்கிய சாராம்சங்களை குறிப்பெடுக்க பழக வேண்டும். பின்பு அந்த குறிப்புகளில் முக்கியமானவற்றை மட்டும் சுருக்கி எழுத வேண்டும்.

அதில் ஏதேனும் சந்தேகம் எழுந்தால் ஆசிரியரிடமோ, சக மாணவர்களிடமோ கேள்வி எழுப்பி தெளிவு பெற வேண்டும். இத்தகைய செயல்முறை கற்றல் நுட்பங்களை பின்பற்றுவது பாடம் மீது ஆழமான புரிதலை ஏற்படுத்தும். சிந்தனை திறனை வளர்க்கும். திறம்பட தேர்வு எழுதி நல்ல மதிப்பெண் பெறவும் வழிவகுக்கும்.

சிறிது நேர ஓய்வு

தினமும் குறிப்பிட்ட நேரத்தை படிப்புக்காக ஒதுக்கி, தொடர்ந்து படிக்கும்போது ஒருவித சோர்வு எட்டிப்பார்க்கும். படிப்புக்கு இடையே 5 முதல் 10 நிமிடங்கள் ஓய்வு எடுக்க வேண்டும். மீண்டும் படிப்பை தொடர்வது மன ரீதியாக புத்துணர்ச்சி பெற உதவும். படிப்பின் மீது முழு கவனத்தையும் திருப்புவதற்கு வித்திடும்.

ஊட்டச்சத்து உணவு

நாள் முழுவதும் இடை இடையே போதுமான அளவு தண்ணீர் பருகுவதன் மூலம் உடல் நீரேற்றத்தை தக்க வைத்துக்கொள்ளும். படிப்புக்கு இடையே சத்தான சிற்றுண்டிகளை சாப்பிட வேண்டும். அது அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிறைந்த சமச்சீர் உணவாக அமைய வேண்டும். அவை மூளைக்கு ஊட்டமளித்து அதன் செயல்திறனை மேம்படுத்த உதவும். அறிவாற்றல் செயல்பாட்டையும் அதிகப்படுத்தும்.

போதுமான தூக்கம்

நினைவகத்தை ஒருங்கிணைப்பதற்கும், ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கும் ஆழ்ந்த தூக்கம் இன்றியமையாதது. மாணவர்கள் தினமும் போதுமான நேரம் தூங்கி எழ வேண்டும். நன்கு ஓய்வு எடுக்கும் மனம் கற்றல் விஷயங்களை மறக்காமல் நினைவில் தக்கவைத்துக்கொள்ளும்.

பாராட்டு

நேர்மறை எண்ணங்கள் ஊக்கத்தையும், விடாமுயற்சியையும் உருவாக்கும். எனவே பிள்ளைகளின் முயற்சிகளை அங்கீகரித்து கொண்டாடுங்கள். அவர்கள் படிப்பில் அடைந்திருக்கும் முன்னேற்றம் எவ்வளவு சிறியதாக இருந்தாலும் அதனை சாதனையாக கருதி பாராட்டுங்கள்.

யாரும் நிர்பந்திக்காமலேயே சுயமாக படிப்பின் மீது ஆர்வத்தை வளர்த்தெடுக்க அது உதவும். அவர்களாகவே குறிப்பிட்ட நேரத்தை படிப்புக்கு ஒதுக்கி விடுவார்கள். நன்றாக படித்து அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கு தங்களை தயார்படுத்திக்கொள்வார்கள்.

 பாடங்களை பிரித்தல்

முழு ஆண்டுத்தேர்வுக்கு பாடப்புத்தகத்தை முழுமையாக படிக்க வேண்டியிருக்கும். ஒவ்வொரு பகுதிகளாக படித்து முடிப்பதை பெரிய பணியாக உணரலாம். அதில் கடினமான பகுதிகளை படிப்பது சிரமமானதாக, சவாலானதாக சில மாணவர்களுக்கு அமையலாம். ஒவ்வொரு பகுதிகளையும் தனித்தனியாக பிரித்து, அதில் எளிமையான பகுதிகளை முதலில் படிப்பதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

கடினமான பகுதிகளை அதிகாலை வேளையில் படிப்பதற்கு முயற்சிக்க வேண்டும். இப்படி தரம் பிரிப்பதன் மூலம் விருப்பமான பாடங்களை விரைவாக படித்து முடித்துவிட முடியும். அதனால் படிப்பது பெரும் சுமையாக தோன்றாது. இந்த அணுகுமுறை மன அழுத்தத்தையும் தவிர்க்க உதவும். தினமும் படிக்க தொடங்குவதற்கு முன்பு ஏற்கனவே படித்த பகுதிகளை மீண்டும் ஒருமுறை வாசிப்பது நினைவில் ஆழமாக பதிய உதவும். தேர்வை எளிமையாக எழுதுவதற்கு வழிவகுக்கும்.

Tags:    

Similar News