குழந்தை பராமரிப்பு

குழந்தையின் நினைவாற்றலை மேம்படுத்த சில வழிகள்

Published On 2024-01-29 06:34 GMT   |   Update On 2024-01-29 06:34 GMT
  • அறிவு திறன் வளர்ச்சியை அதிகரிப்பதில் நினைவாற்றல் முக்கிய பங்கு வகிக்கிறது.
  • நினைவில் கொள்ளும் திறனை அதிகரிக்கும்.

உங்கள் குழந்தையின் கற்றல், அறிவு திறன் மற்றும் வளர்ச்சியை அதிகரிப்பதில் நினைவாற்றல் முக்கிய பங்கு வகிக்கிறது. மோசமான நினைவாற்றல் திறன் கொண்ட ஒரு குழந்தை பள்ளியில் பல்வேறு இடர்பாடுகளை சந்திக்க நேரிடும். எனவே குழந்தையின் நினைவாற்றலை மேம்படுத்த சில வழிகள் உள்ளது. உங்கள் பிள்ளைக்கு எந்த பிரச்சனையும் இல்லாவிட்டாலும், இந்த உதவிக்குறிப்புகளை முயற்சிப்பது அவர்களின் நினைவாற்றலையும் மூளையின் திறனையும் மேலும் கூர்மைப்படுத்த உதவும்.

 விளையாட்டுகள்:

ஒருவரின் நினைவாற்றல் மற்றும் அறிவை மேம்படுத்துவதற்கு வேடிக்கையான மற்றும் சவாலான பிரைன் கேம்கள் தேவைப்படுகின்றன. இவை எங்கும் விளையாடக்கூடிய சுயமாக உருவாக்கப்பட்ட கேம்களாக கூட இருக்கலாம் அல்லது வீட்டில் குடும்ப உறுப்பினர்களுடன் விளையாடுவதற்கான போர்டு கேம்களாக இருக்கலாம்.

உங்கள் குழந்தையின் வளரும் ஆண்டுகளில் இதுபோன்ற விளையாட்டுகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள். இவை அவர்களின் நினைவாற்றல் தசைகளுக்குப் பயிற்சி அளித்து, எல்லா வகையான விஷயங்களையும் தகவலையும் சரியாக நினைவுப்படுத்த உதவும். அத்துடன் நினைவில் கொள்ளும் திறனை அதிகரிக்கும்.

மன அழுத்தம்:

ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு தனித்துவமான கற்றல் முறை உள்ளது. அவர்களின் பாடங்களை புரிந்துகொள்ள நீங்கள் அவர்களுக்கு தேவையான நேரத்தை வழங்க வேண்டும், மேலும் புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்ளும்போது அவர்கள் எந்தவித அழுத்தமோ அல்லது தாழ்வு மனப்பான்மையோ உணரக்கூடாது. எனவே உங்கள் பிள்ளையின் ஆர்வத்தை ஊக்குவித்து, புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதில் அவர்களை உற்சாகப்படுத்துங்கள். இந்த மனப்பான்மை மிகவும் அவசியம், அதனால் அவர்கள் தங்களுக்குப் பிடித்த பள்ளிப் பாடத்தை ஒருபோதும் மறக்க மாட்டார்கள்.

தூக்கம்:

குழந்தைகளின் நினைவாற்றலை வலுப்படுத்தவும் மேம்படுத்தவும் ஒவ்வொரு நாளும் சுமார் 8-10 மணிநேர ஆழ்ந்த தூக்கத்தை அவர்கள் பெற வேண்டும். உங்கள் குழந்தைகளுக்கு ஒரு வழக்கமான தூக்க அட்டவணையை வைத்திருப்பதும் முக்கியம், மேலும் அவர்கள் சரியான நேரத்தில் படுக்கைக்குச் செல்வது அவசியம். இதனால் அவர்கள் அடுத்த நாள் பள்ளிக்கு எழுந்திருக்கும் முன் போதுமான ஓய்வு பெற்றிருப்பார்கள்.

நேஷனல் அகாடமி ஆஃப் சயின்சின் ப்ரோசீடிங்சில் வெளியிடப்பட்ட ஆய்வில், காலையில் பார்த்த கார்ட்டூன் படங்களை நினைவுபடுத்தும் குழந்தைகளின் திறன் பிற்பகல் தூக்கத்திற்குப் பிறகு 10 சதவிகிதம் அதிகரிக்கிறது என்று ஆய்வு செய்துள்ளனர்.

 பச்சை காய்கறிகள்:

பச்சை காய்கறிகள் வைட்டமின்கள், ஆன்ட்டி-ஆக்சிடெண்ட்ஸ், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து ஆகியவை நிறைந்துள்ளது. மேலும் இதில் வைட்டமின்கள் எ,பி , சி, டி மற்றும் கே போன்ற வைட்டமின்கள் குழந்தையின் மூளை வளர்ச்சி மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

கீரை, கொத்தமல்லி இலைகள், புதினா இலைகள், கடுகு இலைகள், கீரை, பீட்ரூட் இலைகள் போன்றவை சிறந்த காய்கறிகளாகும். உங்கள் குழந்தை தினமும் இவற்றை உட்கொள்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மேலும் புதினா இலைகளை புத்துணர்ச்சியூட்டும் பானங்களில் சேர்க்கலாம், கொத்தமல்லி இலைகளை அனைத்து வகையான குழம்புகளிலும் பயன்படுத்தலாம்.

 நட்ஸ்:

நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க குழந்தைகளுக்கு சத்தான உணவு தேவைப்படுகிறது. எனவே அவர்களின் உணவில் பாதாம், நிலக்கடலை, பிஸ்தா மற்றும் முந்திரி ஆகிய ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த நட்ஸ் வகை உணவு பொருட்களை சேர்த்துக் கொள்ளலாம்.

மேலும் பூசணி விதை, சியா விதைகள், எள் விதைகள், சூரியகாந்தி விதைகள் மற்றும் ஆளி விதைகள் போன்ற விதைகள் குழந்தைகளின் அறிவாற்றல் திறன்களை மேம்படுத்துகிறது. இவற்றை நேரடியாக சாப்பிடலாம் அல்லது கேக், மில்க் ஷேக், கீர் போன்றவற்றில் சேர்த்துக் கொள்ளலாம்.

முட்டை:

நமது மூளை ஒமேகா-3 கொழுப்பு அமிலம் மற்றும் டிஹெச்ஏ போன்ற கொழுப்புகளால் ஆனது. இவை பெரும்பாலும் முட்டை மற்றும் சால்மன் போன்ற மீன்களில் காணப்படுகின்றன. இந்த உணவுகள் மூளை மற்றும் நரம்பு செல்களை மேம்படுத்தி, ஒருவரின் கற்றல் சக்தி மற்றும் நினைவாற்றலை அதிகரிக்கும். எனவே புரதம் நிறைந்த உணவுகளை குழந்தையின் உணவில் அவசியம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

Tags:    

Similar News