குழந்தை பராமரிப்பு

ஒரு வயதுக்குட்பட்ட குழந்தை அழுவதற்கான காரணத்தை அறிந்து கொள்வது எப்படி?

Published On 2022-10-30 04:34 GMT   |   Update On 2022-10-30 04:34 GMT
  • கைக்குழந்தையைப் பொறுத்தவரை ‘அழுகை’ என்பது ஒரு மொழி.
  • குழந்தை தினமும் மொத்தத்தில் சுமார் ஒரு மணி நேரம் அழுவது இயல்பு.

குழந்தைச் செல்வத்தின் இன்பத்தை எடுத்துக் கூறியுள்ளார். அதே குழந்தைகள் அழத் தொடங்கினால் நம் மனது மிகவும் துன்பப்படும். எப்பேற்பாடுபட்டாவது அழுகையை நிறுத்த முயற்சிப்போம். பல நேரங்களில் தோல்விதான் மிஞ்சும்.

ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தை அதிகமாக அழும்போது, அது எதற்காக அழுகிறது, என்ன செய்தால் அழுகை நிற்கும் எனத் தெரியாமல் திகைக்கிற தாய்மார்தான் அதிகம். கைக்குழந்தையைப் பொறுத்தவரை 'அழுகை' என்பது ஒரு மொழி. தாயின் கவனத்தைத் தன் மீது ஈர்ப்பதற்குப் பயன்படுத்தும் எளிய வழி. பசி, தாகம், தனிமை, களைப்பு போன்ற சாதாரணக் காரணங்களால் குழந்தை தினமும் மொத்தத்தில் சுமார் ஒரு மணி நேரம் அழுவது இயல்பு. இந்தக் கால அளவு அதிகரித்தால் அல்லது குழந்தை தொடர்ந்து அழுகிறது என்றால், அதைக் கவனிக்க வேண்டும்.

குழந்தை பசிக்காகத்தான் அழுகிறது என்பது பல தாய்மாரின் முதன்மைக் கணிப்பு. இது பெரும்பாலும் உண்மைதான் என்றாலும், பசியையும் தாண்டிப் பல காரணங்களால் குழந்தை அழக்கூடும். குழந்தை பசிக்காகத்தான் அழுகிறதா என்பதை உறுதிசெய்ய, தாயானவர் தன் விரலை நன்றாகச் சுத்தப்படுத்திக் கொண்டு, குழந்தையின் வாய்க்குள் வைத்தால், உடனே குழந்தை விரலைச் சப்பத் தொடங்கிவிடும். இதன் மூலம் குழந்தை பசியால் அழுகிறது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். பொதுவாக, குழந்தை போதிய அளவு பால் குடித்த பின்னர், இரண்டு மணி நேரத்துக்குள் அழுதால், அது நிச்சயம் பசிக்காக இருக்காது. வேறு காரணத்தால் அது அழக்கூடும்.

பசிக்கு அடுத்தபடியாகத் தாகம் எடுத்தால் குழந்தை அழும். உதாரணமாக, திட உணவு சாப்பிடும் குழந்தைக்குச் சில தாய்மார் உணவைக் கெட்டியாகப் பிசைந்து கொடுத்துவிடுவார்கள். இதனால் உணவு விக்கிக்கொள்ளும். குழந்தைக்குத் தாகம் எடுக்கும். இதனால் சாப்பிட்ட பிறகு குழந்தை அழும். அப்போது கொஞ்சம் தண்ணீரைக் கொடுத்தால், குழந்தையின் அழுகை நின்றுவிடும். பால் குடித்த பிறகு சிறுநீர் கழிப்பது, மலம் கழிப்பது போன்றவற்றால் உள்ளாடை, படுக்கை போன்றவை ஈரமாகி விடும்போது, அதைத் தெரியப்படுத்தவும் குழந்தை அழும். குழந்தை இரவில் அழுவதற்குப் பெரும்பாலும், இதுதான் காரணமாக இருக்கும். ஈரமான துணியை மாற்றிவிட்டால் அழுகை நிற்கும்.

அதிகக் கனமான ஆடைகள், இறுக்கமான ஆடைகள், உறுத்துகிற ஆடைகள் மற்றும் கால் கொலுசு, கழுத்து செயின், இடுப்பு ஆபரணங்கள் ஆகியவற்றாலும் குழந்தை அடிக்கடி அழலாம். `டயபர்' என்பது அவசரத் தேவைக்கு என்பது போய், இப்போது எந்த நேரமும் அணிவிக்கப்படும் ஓர் உள்ளாடையாக அது மாறிவிட்டது. இதனால் ஒவ்வாமை ஏற்பட்டு, குழந்தைக்கு அரிப்பும் தடிப்பும் உண்டாகின்றன. இதன் காரணமாகவும் குழந்தைகள் அடிக்கடி அழுவதுண்டு.

தன்னுடைய உடலில் ஏதேனும் புதிதாக ஊர்வது போல் உணர்ந்தால், அப்போது குழந்தை அழலாம். எறும்பு, கொசு, பூச்சி, பேன் கடித்தாலோ, சருமம் அரித்தாலோ குழந்தை அழும்.

குழந்தைக்கு வயிற்று வலியும் காது வலியும் ஏற்படுவது மிகவும் சகஜம். குழந்தை தன்னுடைய தொடையை வயிற்றில் மடித்து வைத்துக்கொண்டு அழுதால், அதற்கு வயிற்றில் வலி இருக்கிறது என்று புரிந்துகொள்ளலாம். குழந்தைக்கு அளவுக்கு அதிகமாகப் பால் அல்லது திட உணவைக் கொடுத்துவிட்டால், வயிறு உப்பி அழ ஆரம்பிக்கும். இதுபோல் உணவுடன் அதிகக் காற்று வயிற்றுக்குள் சென்றுவிட்டாலும், குழந்தை அழும். தாய்ப்பால் கொடுத்து முடித்தவுடன், ஒவ்வொரு முறையும் குழந்தையைத் தூக்கித் தோளில் போட்டுக்கொண்டு அதன் முதுகைத் தட்டிக் கொடுக்க வேண்டும். இதனால் குழந்தையின் வயிறு தாயின் தோளில் அழுந்திக் காற்று வெளியேறிவிடும். குழந்தையும் அழுவதை நிறுத்திவிடும்.

சளி, மூக்கு ஒழுகல், மூக்கு அடைப்பு, காய்ச்சல், தலைவலி, உடல் வலி, இளைப்பு, நெஞ்சில் வலி, சிறுநீர்க் கடுப்பு, மலச் சிக்கல், வாந்தி போன்ற காரணங்களாலும் குழந்தை அழக்கூடும்.

குழந்தையின் உடலை மெல்லிய துணி கொண்டு சுற்றுவதால் குழந்தைகளின் அழும் நேரம் குறைக்கிறது என்று ஆய்வுகள் நிரூபித்துள்ளன. அதெற்கென ப்ரத்யேகமாக துணிகள் கடைகளில் கிடைக்கின்றன வாங்கி பயன்படுத்துங்கள். இது உங்கள் குழந்தையின் அழுகையை தடுத்து ஆறுதலையும் பாதுகாப்பையும் அளிக்கிறது. அதே நேரம் தலை மற்றும் முகம் மூடிவிடாமல் பார்த்து கொள்ளவும், இது குழந்தை எளிதாக சுவாசிக்க உதவும். உங்கள் குழந்தையின் கைகளை வெளியில் விட்டும் சுற்றலாம். குழந்தை வயிற்றினால் படுக்க அல்லது தவழ முயற்சிக்கும் காலங்களில் இம்முறையை நிறுத்தி விட வேண்டும்.

குழந்தையின் அழுகையை நிறுத்துவதற்கு விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்ட முறைதான் மேலும் கீழும் (ராக்) உங்கள் குழந்தையை அசைத்தல். அதற்கு குழந்தையை பாதுகாப்பாக உங்கள் கைகளில் பிடித்து மெதுவாக ராக் செய்யவும். இம்முறையால் அழும் குழந்தை பாதுகாப்பாக உணர்கிறது. அதுமட்டுமல்லாமல் பின்வரும் காலங்களில் இது குழந்தை மனஉறுதியுடன் வளர்வதற்கு உதவுகிறது.

வயிறு பிரச்சினை உங்கள் குழந்தை தொடர்ந்து அழ வைக்கும் ஒரு முக்கிய காரணி. ஏப்பத்தின் மூலமாக வயிற்றில் உள்ள காற்றை வெளியேற்றுவதன் மூலம் குழந்தையின் அழுகையை நிறுத்தலாம். அதற்கு உங்கள் குழந்தை கிடத்தி சைக்கிள் ஓட்டுவது போல் கால்களை அசைப்பதன் மூலம் வயிற்றில் உள்ள காற்றை வெளியேற்றலாம்.

Tags:    

Similar News