null
குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்த்தொற்று
- குழந்தைகளுக்கு மிக எளிதாக உடல்நல பாதிப்பு ஏற்படும்.
- குளிர்காலத்தின் பொதுவான நோய் என்றால் அது ஜலதோஷம் தான்.
பொதுவாக குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு மிக எளிதாக உடல்நல பாதிப்பு ஏற்படும். குறிப்பாக குளிர்காலத்தில் வரக்கூடிய தொண்டை வலி, சளிப்பிடித்தல், காய்ச்சல், நிமோனியா, காது வலி, ஆஸ்துமா மற்றும் தோல் நோய்கள் போன்றவற்றால் குழந்தைகள் எளிதில் பாதிக்கப்படுவா்.
மழை, பனிபொழிவு ஆகியவற்றால் குளிர்காலம் ஒரு மாயாஜால பருவமாக தென்படலாம். ஆனால் இது பல்வேறு விதமான நோய்கள் தலைதூக்கி குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய காலமாகும்.
குளிர்கால தொற்றுகள்
குளிர்காலத்தில் சமூக பரவல் காரணமாக குழந்தைகளுக்கு தொற்று ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி ஒவ்வாமை, மோசமான காற்றின் தரத்தால் மூக்கடைப்பு, ஆஸ்துமா போன்ற பிரச்சினைகளுக்கும் ஆளாகின்றனர். குளிர்காலத்தில் வேறு சில நோய்களும் குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். காய்ச்சல், தலைவலி மற்றும் உடல்வலி, தொண்டை வலி, சோர்வு, வலுக்குறைவு, தசைவலி, இருமல் ஆகியவை குளிகாலத்தில் ஏற்படும் நோய்கள் ஆகும்.
ஜலதோஷம்
குளிர்காலத்தின் பொதுவான நோய் என்றால் அது ஜலதோஷம் தான். குளிர்காலத்தில் ஒரு முறையாவது அனைவருக்கும் ஜலதோஷம் வந்துவிடும். இதனை பருவமாற்றத்தின் அறிகுறியாக கருதினாலும், ஜலதோஷம் இறுதியாக நிமோனியா மற்றும் சைனஸ் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
சுவாசக்குழாய் தொற்று
குளிர்காலத்தில் வறண்ட காற்றின் காரணமாக மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் நிமோனியா போன்ற சுவாசக்குழாய் தொற்றுகள் அதிகமாக ஏற்படும். மிகக் குளிர்ந்த வெப்பநிலையால் வெளிப்படும் நிமோனியாவால் லேசானது முதல் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே நிமோனியாவிற்கு சிகிச்சை அளிப்பதை விட வருமுன் காப்பதே சிறந்ததாகும். குளிர்காலத்தில் மூச்சுக்குழாய் அழற்சியானது , குழந்தைகள் மற்றும் ஆஸ்துமா நோயாளிகளுக்கு மிக அபாயமானதாகும். சின்சிடியல் வைரசால் தூண்டப்படும் சுவாசத் தொற்றே மூச்சுக்குழாய் அழற்சி என்றழைக்கப்படுகிறது.
நோரோ வைரஸ்
இந்த வைரஸ் இரைப்பை குடல் அழற்சிக்கு வழிவகுக்கும். வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவை நோரோவைரசின் அறிகுறிகள் என்று தேசிய சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. உணவு உண்பதற்கு முன்பும், கழிவறையை பயன்படுத்திய பிறகும் கைகளை நன்றாக கழுவவும். சுகாதாரமான உணவை மட்டும் சாப்பிடுங்கள்.