குழந்தை பராமரிப்பு

10 வயதிற்குள் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டிய வாழ்வியல் திறன்கள்

Published On 2023-05-23 05:27 GMT   |   Update On 2023-05-23 05:27 GMT
  • முதலுதவி எப்படி செய்ய வேண்டும் என்று குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கலாம்.
  • இண்டர்நெட்டை பாதுகாப்பாக பயன்படுத்துவதற்கு சொல்லிக்கொடுக்க வேண்டும்.

ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளை தனித்துவமிக்கவர்களாக வளர்க்க ஆர்வம் காட்டுகிறார்கள். வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், சவால்களை பக்குவமாக கையாளும் மன தைரியம் கொண்டவர்களாகவும் அவர்களை தயார்படுத்துவது அவசியமானது. 10 வயதிற்குள் குழந்தைகளுக்கு ஒருசில வாழ்வியல் திறன்களை கற்றுக்கொடுக்க வேண்டியது முக்கியமானது.

சுதந்திரம்: தங்கள் குழந்தைகள் சுதந்திரமாக வளர வேண்டும் என்ற எண்ணம் பெரும்பாலான பெற்றோருக்கு இருக்கிறது. அதேவேளையில் தங்கள் கருத்துகளை குழந்தைகள் மீது திணிக்கவும் செய்கிறார்கள். அது சுதந்திரமான சூழலுக்கு வழிவகுக்காது. குழந்தைகளை சுதந்திரமாக எதையும் கற்றுக்கொள்ள விடாமல் தாங்களே முடிவெடுப்பதால் குழந்தைகளுக்கு எந்த பயனும் ஏற்படாது. தங்கள் ஆசைகள், கனவுகளை குழந்தைகள் மீது ஒருபோதும் திணிக்கக்கூடாது. அவர்களை அவர்களாக வளர விடுவதுதான் நல்லது. அதற்காக அதிக சுதந்திரம் கொடுத்துவிடவும் கூடாது.

உணவு தயாரித்தல்: இருவருமே வேலைக்கு செல்லும் பெற்றோர்களாக இருந்தால் சில சமயங்களில் குழந்தைகளுக்கு பிடித்தமான உணவை தயார் செய்து கொடுப்பதற்கு நேரம் இல்லாமல் போகக்கூடும். பெற்றோர் வீடு திரும்பும் வரை பசியுடன் குழந்தைகள் காத்திருக்கும் சூழ்நிலையும் உண்டாகும். அதனை தவிர்ப்பதற்கு எளிய உணவுகளை தயார் செய்து கொள்ள குழந்தைகளை பழக்கப்படுத்த வேண்டும்.

அடுப்பில் வைத்து சமைக்காமல் தயார் செய்யப்படும் ரெசிபிகளை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கலாம். வழக்கமாக காய்கறிகள், பழங்கள் நறுக்க பயன்படுத்தும் கத்திக்கு பதிலாக பிளாஸ்டிக் கத்தியை கொண்டு பழங்களை வெட்டுவதற்கு பழக்கலாம். ஆரம்பத்தில் குழந்தைகள் உணவு தயாரிக்க பழகும்போது வீணாக்கக்கூடும். அப்போது கோபப் படாமல் பொறுமையாக சொல்லிக்கொடுக்க வேண்டும். பின்பு அவர்களாகவே தங்களுக்கு பிடித்தமான உணவு ரெசிபிகளை தயார் செய்து கொள்வதற்கு பழகிவிடுவார்கள்.

இண்டர்நெட்: கொரோனா தொற்று காரணமாக ஆன்லைன் வகுப்பு வழியே பாடங்களை பயில்வதால் மொபைல், லேப்டாப் போன்ற சாதனங்களில் செலவிடும் நேரம் அதிகரித்துவிட்டது. அதனை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவதற்கு ஊக்குவிப்பது பெற்றோர் கையில்தான் இருக்கிறது. பாடத்திட்டங்கள் சார்ந்த ஏராளமான விஷயங்கள் டிஜிட்டல் யுகத்தில் கொட்டிக்கிடக்கின்றன. அவற்றை மட்டுமே பார்ப்பதற்கு அனுமதிக்காமல் பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்வதற்கும் ஊக்குவிக்க வேண்டும். இண்டர்நெட்டை பாதுகாப்பாக பயன்படுத்துவதற்கும் சொல்லிக்கொடுக்க வேண்டும்.

துணி துவைத்தல்: பள்ளிப் படிப்பை முடித்து விட்டு கல்லூரி படிப்பிற்காக வெளியூரில் தங்கி படிக்கும் டீன் ஏஜ் பருவத்தினர் பலர் துணி துவைப்பதற்கு சிரமப்படும் நிலை இருக்கிறது. அதனை அசவுகரியமாகவும் கருதுகிறார்கள். அதனை தவிர்க்க சிறு வயதிலேயே தங்கள் துணிகளை தாங்களே துவைப்பதற்கு குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். 6 வயதுக்கு பிறகு இந்த பழக்கத்தை பின்தொடர ஊக்குவிக்க வேண்டும். அதன் மூலம் சுகாதாரத்தை பேணுவற்கு பழகிவிடுவார்கள்.

செடி வளர்ப்பு: குழந்தை பருவத்திலேயே செடி வளர்க்கும் ஆர்வத்தை அவர்களிடத்தில் தூண்டிவிட வேண்டும். செடிகளை பராமரிப்பதற்கும் கற்றுக் கொடுக்க வேண்டும். செடிகள் வளர்ப்பின் நன்மைகள் குறித்தும் போதிக்க வேண்டும். வளரும்போது மரம் வளர்க்கும் ஆர்வம் இயல்பாகவே எழுந்துவிடும்.

கடிதம் எழுதுதல்: மொபைல்போன் ஆதிக்கம் தலைதூக்கிய பிறகு கடிதம் எழுதும் பழக்கம் அறவே இல்லாமல் போய் விட்டது. இந்த பழக்கத்தை குழந்தைகளை பின்பற்ற செய்வதன் மூலம் அவர்களின் கற்பனை திறன் மேம்படும். அவர்களின் கையெழுத்தும் அழகாக மாறும். சிறப்பாக எழுதுபவர்களுக்கு பரிசு வழங்கி ஊக்கப்படுத்தலாம். டைரி எழுதவும் பழக்கப்படுத்த லாம்.

முதலுதவி: எதிர்பாராதவிதமாக காயம் ஏற்பட்டால் முதலுதவி எப்படி செய்ய வேண்டும் என்று குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கலாம். இளைஞர்கள் கூட ரத்தத்தை பார்த்தால் பயந்து மயங்கி விழும் நிலை இன்றும் இருக்கத்தான் செய்கிறது. குழந்தை பருவத்திலேயே காயங்களுக்கு முதலுதவி செய்வதற்கு பழக்கப்படுத்துவதன் மூலம் இந்த பிரச்சினையை தவிர்த்துவிடலாம்.

Tags:    

Similar News