குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கும் விதம் மாறிவிட்டது...
- கல்வி கற்பிக்கும் விதமும், குழந்தைகளை வழிநடத்தும் விதமும் ரொம்பவே மாறிவிட்டது.
- கல்வி மட்டுமின்றி, பல்வேறு திறமைகளுடன் வளர்க்க ஆசைப்படுகிறார்கள்.
நாம் பயின்ற பள்ளிகளுக்கும், இப்போது இயங்கும் பள்ளிகளுக்கும் நிறைய வித்தியாசம் இருப்பதை உணர்ந்திருப்பீர்கள். கல்வி கற்பிக்கும் விதமும், குழந்தைகளை வழிநடத்தும் விதமும் ரொம்பவே மாறிவிட்டது. குழந்தைகளை திட்டக்கூடாது, துன்புறுத்தக்கூடாது... என்பது போன்ற பல்வேறு அரசு வழிகாட்டுதல்கள் நடைமுறையில் இருக்கிறது. இவை வருங்காலத்தில் அதிகரிக்கும் பட்சத்தில், மாண்டிசோரி கல்வி முறையே எல்லோருக்கும் சிறப்பானதாக இருக்கும். மேலும் பெற்றோர்களின் கவனமும் மாண்டிசோரி பள்ளிகள் மீது பதிந்திருக்கிறது.
இந்த காலத்து பெற்றோர்கள் தங்களது குழந்தைகள், போட்டி நிறைந்த சமூகத்தை சமாளிக்கும் வகையில் வளர, படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். கல்வி மட்டுமின்றி, பல்வேறு திறமைகளுடன் வளர்க்க ஆசைப்படுகிறார்கள். பெற்றோர் இருவருமே பணிக்கு செல்வதால், பள்ளிக்கூடம் முடிந்து வீட்டிற்கு வந்த பிறகு பிள்ளைகள் அவர்களுக்கு தேவையானவற்றை அவர்களே செய்து கொள்ளும்படியாக வளர வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்கள்.
சமூக பொறுப்புகளையும், சமூக ஒழுக்கத்தையும் கற்றுக்கொடுக்க ஆசைப்படுகிறார்கள். இவை அனைத்தும்தான் மாண்டிசோரி கல்வி முறையின் தூண்கள் என்பதால்... பெரும்பாலான பெற்றோர் தங்களது குழந்தைகளை மாண்டிசோரி பள்ளிகளில் சேர்க்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
ஒவ்வொரு குழந்தைக்கும் தனியாக கற்று கொடுக்கும் முறை இதில் உண்டு. கற்று கொள்வதற்கு நேர வரைமுறை கிடையாது. இரு வழி உரையாடல். பொது பள்ளிகளில் ஆசிரியர் சொல்லுவதை மட்டும் கேட்க வேண்டும். ஆனால் மாண்டிசேரி கல்வி முறையில் குழந்தைகளின் கேள்விகளுக்கு கட்டாயம் பதில் சொல்ல வேண்டும்.
தேர்வுகள் மற்றும் வீட்டு பாடங்கள் கிடையாது. ஒழுக்க விதிகள் திணிக்கப்படாமல் படிப்படியாகக் கற்று கொடுக்கப்படுகின்றன. எந்தப் பொருளையும் தொட்டு பார்க்க வேண்டும், கவனமாக எடுக்க வேண்டும், திரும்ப கவனமாக கையாண்டு அதே இடத்திலேயே வைக்க வேண்டும். அடுத்தவரை தொந்தரவு செய்யாமல் இருக்கவும், அமைதி காக்கவும் சொல்லி கொடுக்கப்படுகிறது.