குழந்தைகள் முன் பெற்றோர் செய்யக்கூடாத விஷயங்கள்
- குழந்தைகளின் முன் மற்றவர்களை பற்றி தவறாகவோ அல்லது இழிவாகவோ பேச வேண்டாம்.
- குழந்தைகளின் முன் மது அருந்துவது மற்றும் புகைப்பிடிக்கும் பழக்கத்தை செய்ய வேண்டாம்.
குழந்தைகள் இயல்பாகவே கள்ளம் கபடமற்றவர்கள். அவர்கள் மற்றவர்களிடம் பார்க்கும் மற்றும் கேட்கும் விஷயங்களை அப்படியே செய்வார்கள். எனவே அவர்கள் முன் நாம் செய்யும் ஒவ்வொரு விஷயத்தையும் கவனமாக செய்ய வேண்டும்.
* உங்கள் குழந்தையின் முன் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். குழந்தையின் முன் வாக்குவாதத்தில் ஈடுபடுவது குழந்தையின் மன அமைதியை பாதிப்பதோடு, அவர்களை கடின உள்ளம் கொண்டவர்களாக மாற்றும். நாம் செய்யும் அனைத்து செயலையும் அவர்கள் அப்படியே வெளியுலகத்தில் பிரதிபலிக்கலாம்.
* குழந்தைகளின் முன் மது அருந்துவது மற்றும் புகைப்பிடிக்கும் பழக்கத்தை செய்ய வேண்டாம். குழந்தைகள் பல விஷயங்களை நம்மை பார்த்து கற்றுக்கொள்வார்கள். தந்தை செய்யும் பழக்கம் சரி தான் என நம்ப நேரிடும். எனவே, குழந்தைகளின் முன் தீய பழக்கங்களில் ஈடுபட வேண்டாம்.
* உங்கள் குழந்தையின் முன் கெட்ட வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம். குழந்தைகளின் முன்பு நீங்கள் பயன்படுத்தும் வார்த்தைகள், அவர்களின் மனதில் ஆழமாக பதிந்துவிடும். அதை அவர்கள் மற்றவர்களிடம் பேசுவதற்கு வாய்ப்பு அதிகம்.
* குழந்தைகளின் முன் மற்றவர்களை பற்றி தவறாகவோ அல்லது இழிவாகவோ பேச வேண்டாம். அப்படி செய்வதால் அந்த நபர் பற்றி, குழந்தைகள் தங்கள் மனதில் தவறான கருத்துக்களை வளர்த்துக்கொள்ள நேரிடும்.
* மற்றவர் முன் உங்கள் குழந்தைகளையோ அல்லது மற்றவர் பற்றி உங்கள் குழந்தைகளின் முன் ஒப்பிட்டு பேசுவது தவறான விஷயம். இவ்வாறு செய்வது அவர்களை மனதளவில் பாதிப்புக்கு உள்ளாக்கும்.
* ஸ்மார்ட்போன், மடிக்கணினி, ஹெட்போன், வீடியோ கேம் போன்ற தொழில்நுட்ப சாதனங்களை குழந்தைகளின் முன் அதிகம் பயன்படுத்த வேண்டாம். இவ்வாறு பயன்படுத்துவது அவர்களை தனிமையாக உணர வைக்கும்.
* பொதுவாகவே கணவன், மனைவியை அடிப்பதும், மனைவி கணவரை அடிப்பதும் தவறு. இருப்பினும் இதுபோன்ற விஷயங்களை குழந்தைகள் முன் செய்யாமல் இருப்பது நல்லது. அதேபோல் அடிக்கடி திட்டுவதும் தவறு. இதனால் குழந்தைக்கும் அவரை பற்றிய தவறான கருத்தை மனதில் பதியக்கூடும்.
* பெற்றோர் முடிந்தவரை குழந்தைகளின் முன் பொய் பேசுவதைத் தவிர்க்க வேண்டும்.
* உடலுக்கு கெடுதலை உண்டாக்கும் உணவுகளை சாப்பிடக்கூடாது என்கிற அறிவுரையை குழந்தைகளுக்குச் சொல்வதோடு பெற்றோரும் கடைபிடிக்க வேண்டும்.