குழந்தை பராமரிப்பு
null

'சம்மர் கேம்ப்': குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் ரீதியான பாதிப்புகள்

Published On 2023-04-21 05:07 GMT   |   Update On 2023-04-21 05:08 GMT
  • ஒருசில இடங்களில் சிறுவர், சிறுமியர்களுக்கு பாலியல் தொந்தரவுகள் ஏற்படுகின்றன.
  • பெற்றோர் பயிற்சி முகாம் பற்றி முழுமையாக விசாரியுங்கள்.

தற்போதுள்ள காலகட்டத்தில் பெற்றோர் குழந்தைகளை 'சம்மர் கேம்ப்' எனப்படும் கோடை பயிற்சி முகாம்களுக்கு அனுப்புகிறார்கள். அங்கு ஒருசில இடங்களில் சிறுவர், சிறுமியர்களுக்கு பாலியல் தொந்தரவுகள் ஏற்படுகின்றன. "கோடை காலம் எப்போது வரும் என்று முன்பெல்லாம் குழந்தைகள் காத்திருப்பார்கள். நண்பர்கள், தோழிகளை எல்லாம் சேர்த்துக்கொண்டு தோட்டத்திற்கு சென்று மரம் ஏறி மாங்காய் பறிப்பார்கள். ஆறுகளுக்கு சென்று நீச்சலடித்து குளித்து மகிழ்வார்கள். கூட்டமாக சேர்ந்து விளையாடுவார்கள்.

தனிக்குடித்தனங்கள் பெருகிவிட்ட நகரத்து குழந்தைகளால் இன்று, அதை கற்பனைசெய்துகூட பார்க்க முடிவதில்லை. அதனால் அவர்களை பெற்றோர் 'சம்மர் கேம்ப்' எனப்படும் கோடை பயிற்சி முகாம்களுக்கு அனுப்புகிறார்கள். அந்த முகாம்களில் தற்காப்பு, நீச்சல், மேற்கத்திய நடனங்கள், ஓவியம் வரைதல், இசைக் கருவிகள் மீட்டுதல் போன்ற பலவிதமான பயிற்சிகளை சிறுவர்-சிறுமியர்களுக்கு வழங்குகிறார்கள். அங்கு ஒருசில இடங்களில் சிறுவர், சிறுமியர்களுக்கு பாலியல் தொந்தரவுகள் ஏற்படுகின்றன. அதனால் அவர்கள் மனக்குழப்பம், மனஅழுத்தம் போன்றவைகளுக்கு உள்ளாகிறார்கள்.

இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், பத்து பதினைந்து நாட்களில் அந்த முகாம்கள் முடிந்துவிடுகின்றன. பாதிக்கப்பட்ட சிறுவர், சிறுமியர்கள் அதுவரை அமைதிகாத்துவிட்டு பெரும்பாலும் ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கும் காலகட்டத்தில்தான் பெற்றோரிடம் சொல்கிறார்கள். அப்போது நிறைய குழந்தைகள் கவுன்சலிங்குக்கு அழைத்துவரப்படுகிறார்கள். பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகும் குழந்தைகளின் கல்வி நிலை பாதிக்கப்படுகிறது. அவர்களுக்கு சமூகத்தை பற்றிய பயமும் அதிகரிப்பதை தெரிந்துகொள்ள முடிகிறது. இந்த உண்மையை உணர்ந்து, பெற்றோர் இந்த கோடைகாலத்தில் தெளிவாக சிந்தித்து செயல்பட வேண்டும்" என்கிறார், பாலியல் பாதிப்புகளுக்கு உள்ளான குழந்தைகளின் மனநல ஆலோசகர் வித்யாரெட்டி.

"முதலில் அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பாலியல் சார்ந்த அடிப்படை விஷயங்களை கற்றுக் கொடுக்கவேண்டும். முக்கியமான உடல்உறுப்புகளை பற்றி எடுத்துக் கூறவேண்டும். அதோடு 'உடல் உறுப்புகளில் எவை எல்லாம் உள் ளாடைகளால் மறைக்கப்படுகிறதோ அவை உனது தனிப்பட்ட உறுப்புகள். அவைகளை உன் உடல் ஆரோக்கிய காரணங்களை தவிர்த்து, வேறு எந்த காரணங்களுக்காகவும் யாரும் அவற்றை தொடுவதோ, பார்ப்பதோ, அவைகளை பற்றி பேசுவதோ சரியானதல்ல' என்பதை புரியவைக்கவேண்டும். தவறான தொடுதல் எது, சரியான தொடுதல் எது என்பதையும் குழந்தைகளுக்கு புரியவைக்கவேண்டும்.

உங்கள் குழந்தை கோடைகால பயிற்சி முகாமுக்கு செல்ல விரும்பினால், 'எங்கேயாவது போ.. எதையாவது கற்றுக்கொள்..' என்று அனுப்பிவிடாமல், பயிற்சி கொடுக்கும் அந்த அமைப்பு பற்றி முழுமையாக விசாரியுங்கள். அவர்களது பின்னணி, அனுபவம், இடம், சூழல், பயிற்சியாளர்கள் பற்றி எல்லாம் விசாரித்து திருப்தியடைந்தால் மட்டும் அங்கு கொண்டுபோய் சேருங்கள்.

பயிற்சி முடிந்து வீடு திரும்பியதும் அங்கு என்ன நடந்தது என்று கேளுங்கள். பயிற்சிக்கு தொடர்பில்லாத நிலையில் தொடுதல்களை உருவாக்கினால், தங்களிடம் சொல்லும்படி கூறுங்கள். பொதுவாக குழந்தைகளுக்கு பாலியல்ரீதியாக தொந்தரவு தர விரும்புகிறவர்கள், முதலில் அவர்களுக்கு குழப்பம் ஏற்படுத்தும் விதத்திலோ அல்லது அவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து தன்வசப்படுத்தும் விதத்திலோ நடந்துகொள்வார்கள்.."

"பெற்றோர் தங்கள் குழந்தைகளை நம்பவேண்டும். 'நீ சொன்னால் சரியாக இருக்கும். நான் உன்னை நம்புகிறேன்' என்று கூறவேண்டும். ஆனால் 99 சதவீத பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை நம்புவதில்லை. 'நீ பயிற்சி முகாமுக்கு செல்ல விரும்பாமல் அவ்வாறு கூறுகிறாய்' என்று பதில்சொல்வார்கள். சிலரோ ஒருபடி மேலே போய், 'அந்த நபர் ரொம்ப நல்லவர். அவரை சந்தேகப்படக்கூடாது' என்று அவருக்கு பாராட்டுரை வழங்கிவிட்டு, தங்கள் குழந்தையை மட்டம் தட்டிவிடுவார்கள். அவ்வாறு பெற்றோர் நடந்துகொள்ளக்கூடாது. குழந்தைகளை முழுமையாக நம்பவேண்டும். குழந்தை சொன்ன உடன் அந்த சம்பவம் பற்றி ஆராயவும் முன்வரவேண்டும்"

கோடை பயிற்சி வகுப்புகளில் நீங்கள் எத்தகைய மாற்றங்களை எதிர்பார்க்கிறீர்கள்?

"புற்றீசல்கள் போல் யார் வேண்டுமானாலும் சம்மர் கேம்ப் நடத்தலாம் என்ற நிலை இருக்கக்கூடாது. தகுதியானவர்கள், தகுதியான பயிற்சியாளர்களை வைத்தே இதை தொடங்கவேண்டும். அவர் களுக்கான நிபந்தனைகளை அரசு வகுத்து, நடத்தை விதிகளை பின்பற்றச்செய்யவேண்டும். மத்திய அரசு 2012-ம் ஆண்டில், குழந்தைகள் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாவதை கட்டுப்படுத்தும் விதத்தில் சட்டம் இயற்றியுள்ளது. அதில் 'ஒரு நிறுவனத்தில் குழந்தைகள் பாலியல் பாதிப்புக்கு உள்ளானால், அதற்கு நிர்வாகம்தான் பொறுப்பு' என்று கூறப்பட்டுள்ளது. இது பள்ளிகள், கோடைகால பயிற்சி முகாம்கள் அனைத்துக்கும் பொருந்தும். அதனால் அத் தகைய நிறுவனங்களை நடத்தும் நிர்வாகிகள் பொறுப்புடன் நடந்துகொள்ளவேண்டும். பிரச்சினைக்குரியவர்களை பயிற்சியாளர் களாக சேர்த்துவிடக்கூடாது. நாம் எல்லா மையங்களையும் குறைசொல்லவில்லை. பிரச்சினைக்குரியவைகள் மட்டும் சமூக நலன் கருதி சரிசெய்யப்படவேண்டும்"

ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

Tags:    

Similar News