குழந்தை பராமரிப்பு

மாணவர்கள் படித்ததை நினைவில் பதிப்பதற்கான டிப்ஸ்

Published On 2023-10-24 04:30 GMT   |   Update On 2023-10-24 04:30 GMT
  • பலரும் தங்களுக்கு ஞாபகத்திறன் இல்லை என்று வருந்துகிறார்கள்.
  • 20 நிமிடங்கள் என பிரித்து பாடங்களைப் படியுங்கள்

படித்த பாடங்களை மறக்காமல் நினைவில் வைத்துக்கொள்வது மாணவர்கள் பலருக்கும் சவாலான விஷயமாக இருக்கிறது. பலரும் தங்களுக்கு ஞாபகத்திறன் இல்லை என்று வருந்துகிறார்கள். ஆனால் பாடங்களை படிக்கும்போது ஒரு சில நுட்பங்களை கையாண்டால் அவற்றை எளிதாக மனதில் பதிய வைக்க முடியும். இவ்வாறு நினைவாற்றல் நுணுக்கங்களை கடைப்பிடிக்கும் மாணவர்கள், மற்றவர்களை விட சிறப்பாக செயல்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அது பற்றிய சில குறிப்புகள் உங்களுக்காக...

நீங்கள் படிக்கும் பாடங்களை ஒலிப்பதிவு (ரெக் கார்டு) செய்து வைத்துக் கொண்டு, அதை ஒரு நாளுக்கு இரண்டு முறையாவது ஒலிக்கச் செய்து கேளுங்கள். உங்களுடைய குரலில் பதிவு செய்யப்படும் தகவல்களை முளை சீக்கிரமாகவே உள்வாங்கிக்கொள்ளும்.

20 நிமிடங்கள் என பிரித்து பாடங்களைப் படியுங்கள். முதல் இருபது நிமிடங்கள் படித்த பாடத்திற்கும். அடுத்த 20 நிமிடங்கள் படிக்கப்போகும் பாடங்களுக்கும் எவ்வித தொடர்பும் இருக்கக்கூடாது. இவ்வாறு செய்வதால் புதிய பாடங்கள் எளிதாக மனதில் பதியும்.

படித்த பாடங்களை எழுதிப் பார்ப்பது, அவற்றை மனதில் நிறுத்துவதற்கான வழி என்பது அனைவருக்கும் தெரியும். அதைப்போலவே 'மைண்ட் மேப் எனப்படும் மன வரைபடம் செய்யும் முறையும் அதிக பலன் தரும். ஆகையால் ஒவ்வொரு பாடத்திற்கும் 'மைண்ட் மேப்' செய்யுங்கள்.

தூங்குவதற்கு முன்பு அன்றைய நாளில் படித்த பாடங்களை ஒரு கதை போல நினைவுபடுத்துங்கள்.

முக்கியமான வினாக்கள் அல்லது மறந்து போகக்கூடிய வினாக்களை அடிக்கடி படியுங்கள். பெற்றோர் மற்றும் நண்பர்களிடம் அவற்றை திரும்பத்திரும்ப சொல்லிப் பாருங்கள்.

பாடங்களை சில பொருட்கள் அல்லது சூழ் நிலைகளுடன் தொடர்புப்படுத்தி மனப்பாடம் செய்யுங்கள். உங்களுடைய பாடத்தை ஒரு கதை போல உருவாக்கி அதை உங்கள் நண்பர்களிடம் சொல்லிப் பாருங்கள்.

படித்த பாடங்களில் உள்ள தகவல்களை 'மைண்ட் மேப்' செய்யும் முறை:

முதலில் மனதுக்குள் ஒரு பெரிய வட்டத்தை வரைந்து, அதன் நடுவில் ஒரு சிறிய வட்டம் வரையுங்கள். அதற்கு நீங்கள் படிக்கப்போகும் பாடத்தின் முதன்மை தலைப்பை வையுங்கள். அதைச் சுற்றிலும் பல வட்டங்களை வரைந்து, அவற்றில் எல்லா துணை தலைப்புகளையும் அடுக்குங்கள். அவற்றின் கீழ் அந்த தலைப்புகளுக்கான இதர தகவல்களை ஒவ்வொன்றாக அடுக்குங்கள். இவ்வாறு கற்பனை செய்து படிக்கும்போது நீங்கள் படித்தது எளிதாக மனதில் பதியும்.

நண்பர்களுடன் சேர்ந்து விவாதியுங்கள். தெரிந்ததை பகிர்ந்தும், தெரியாததை விளக்கியும் உரையாடுங்கள். நீங்கள் படிக்கும் பாடத்தின் பொருள் புரியவில்லை என்றால். அதை புரிந்து கொண்ட பிறகு மனப்பாடம் செய்யுங்கள்.

பாடங்களை உணர்ந்து படியுங்கள். உதாரணமாக உடற்கூறியல் தேர்வுக்கு படிக்கும்போது, உடற் கூறு மாதிரிகளை எடுத்து ஒவ்வொரு பகுதியையும் உணர்ந்து, அவற்றின் பெயர்களை உரக்கச் சொல்லி படியுங்கள், உங்களுக்கு பிடித்த பாடல்களின் ராகத்தில், பாடங்களை அமைத்துப் பாடிய படி படியுங்கள். இவ்வாறு செய்யும்பொது பாடங்கள் நினைவில் பதியும். உலகம் முழுவதும் இந்த முறையை பின்பற்றுகிறார்கள்.

Tags:    

Similar News