அதிகரித்து வரும் தற்கொலைகள், தடுக்க என்ன வழி
- 8 லட்சம் பேர் ஆண்டுதோறும் தற்கொலை செய்துகொள்கின்றார்கள்.
- தற்கொலை செய்துக்கொள்ளும் வயதில் பதின்மவயதில் இருப்பவர்களே அதிகம்.
உலகளாவிய ரீதியில் 8 லட்சம் பேர் ஆண்டுதோறும் தற்கொலை செய்துகொள்கின்றார்கள். அந்த வகையில் ஒவ்வொரு 4௦ விநாடிகளுக்கும் ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றது. விபத்துக்கள் மூலம் நிகழும் மரணங்களை விட தற்கொலை மூலம் நிகழும் மரணங்களே அதிகம்.
ஒரு மனிதனுக்கு மனதில் ஏற்படும் விரக்தி, பயம், மனச்சோர்வு, கவலை எல்லாம் சேர்ந்து அவனை அழுத்தும் போது அவன் தற்கொலை செய்ய முயற்சிக்கிறான்.
தற்போது தற்கொலை செய்துக்கொள்ளும் வயதில் (டீன்ஏஜ்) பதின்மவயதில் இருப்பவர்களே அதிகம். அந்தவகையில் ஒருவர் தற்கொலை செய்துக்கொள்வதற்கான காரணம் மற்றும் தற்கொலை செய்வதற்கு முன்பு அவர்கள் எவ்வாறு நடந்துக்கொள்வார்கள் என்று தெரிந்துகொள்ளலாம்.
தற்கொலை செய்வதற்கான காரணம்
குடும்பத்தில் பிரச்சினை, காதலில் பிரச்சனை, மன அழுத்தம், பரிட்சையில் தோல்வி என்று சின்ன சின்ன காரணங்கள் தான் தற்கொலை எண்ணங்கள் முடிவாகின்றன. தற்கொலை செய்துக்கொள்ள வேண்டும் என்ற முடிவு ஒரு நிமிடத்தில் வருவதில்லை. வருகின்ற பிரச்சினையை எப்படி கையாளுவது என்று தெரியாமல் தவிக்கும் போது அவர்களுக்கு ஒரே முடிவாக தெரிவது தான் தற்கொலை.
அந்தவகையில் நம்முடன் இருக்கும் ஒருவர் தற்கொலை செய்யப்போகிறார் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் ஒரு சில அறிகுறிகள் மூலம் இவர்கள் மிகப்பெரிய பிரச்சினையில் இருகின்றார் என தெரிந்துக்கொள்ள முடியும்.
அறிகுறிகள்
நடத்தையில் மாற்றம்
தற்கொலை செய்துக்கொள்ள நினைக்கும் ஒருவர் எதிர்மறையான எண்ணத்தில் இருப்பார்கள். வாழ்க்கையே வெறுத்து போகின்றது என அடிக்கடி கூறுவார்கள். பேசும் விதம், நடந்து கொள்ளும் விதத்தில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால், அவர்களை தனியாகவிடக்கூடாது. அவர்கள் தோற்றத்தை அழகுபடுத்த விரும்பமாட்டார்கள். மற்றவர்களுக்கு தான் அழகாக தெரிய வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள். தங்களுடைய தோற்றத்தை புறக்கணிக்க ஆரம்பிப்பார்கள். தன்னுடைய நிலையை பார்த்து யாரும் பரிதாபப்பட மாட்டார்களா என்று நினைப்பார்கள்.
நண்பர்களுடன் தற்கொலை பற்றி பேசுவது, தற்கொலை பற்றிய புத்தகங்கள், படங்கள், நாவல்கள், பாட்டுகள் அனைத்தையும் பார்ப்பது. துப்பாக்கி எங்கு வாங்குவது, தூக்கு எப்படி போடுவது, பாய்சன் மருந்துகளை எங்கு வாங்குவது போன்ற கேள்விகளை கேட்க ஆரம்பித்தால் அவர்களை தனியாக விட்டுவிட வேண்டாம். இந்த மாதிரியான அறிகுறியானது மறைமுகமாக எடுத்துக்கூறிகின்றது என அர்த்தம்.
போதை மற்றும் மது
மனதில் ஏற்படும் துன்பத்தை, வலியை மறைக்க மது பழக்கத்திற்கு அடிமையாகுவது. போதையில் ஏற்படும் மனக்கிளர்ச்சி தற்கொலை செய்ய தூண்டுகிறது.
மனநிலையில் மாற்றம்
தீவிர கோபத்தை வெளிப்படுத்துவது, எரிந்து எரிந்து விழுவது மற்றவர்கள் பேச வந்தால் கூட தனிமையை நாடுவது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள். இந்த பிரச்சினையை உடனே சரி செய்யவில்லை என்றால் அது தற்கொலையாக கூட மாறும்.
இழந்ததை நினைத்து கவலைப்படுதல்
மூக அவமானம், உறவு முறிவு போன்றவை தற்கொலை எண்ணத்தை தூண்டி விடுகிறது. தீவிர உடல் நோய், பிற உயிர் இழப்புகள், நிதி நிலைமை போன்றவை தற்கொலைக்கு காரணமாக அமைகின்றன. அந்தவகையில் தான் இழந்தவற்றை நினைத்து வருந்துவதும் கூட தற்கொலை எண்ணங்களை உருவாக்கி விடும்.
தூங்குவதில் சிரமம், எடை அதிகரிப்பு, எடை இழப்பு, குற்ற உணர்வு, தேவையில்லாத கவலைகள், எரிச்சல், சோகம், கோபம், வாழ்க்கையை பற்றிய பயம், நம்பிக்கையின்மை போன்ற அறிகுறிகள் ஏற்படும்.
தற்கொலை தடுப்பு
தற்கொலை அறிகுறிகளை கவனித்து எச்சரிக்கையாக இருப்பதன் மூலம் பல தற்கொலைகளை தடுக்க முடியும். தற்கொலை செய்துக்கொள்ளும் அறிகுறியில் யார் இருந்தாலும் அவர்களை தனியாக விடமால் கூடவே இருந்து கவனித்துக்கொள்வதன் மூலம் அவர்களை காப்பாற்ற முடியும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றது.