குழந்தை பராமரிப்பு

சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடங்குவது எங்கே?

Published On 2022-06-15 04:31 GMT   |   Update On 2022-06-15 04:31 GMT
  • பெண் குழந்தைகளை வளர்ப்பதில் தந்தையை காட்டிலும், தாய் முக்கியமானவர்.
  • பெண் குழந்தைகளின் பாதுகாப்பில் ஆசிரியர்களின் பங்கு முக்கியமானது.

சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடங்குவது எங்கே? என்பது பற்றி மதுரை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பொன்னி விளக்கம் அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

கடந்த காலங்களில் எதுவெல்லாம் வெளிப்படையாக தெரியாதோ, அதை எல்லாம் இப்போது இணையதளம் மூலம் வெளிப்படையாக தெரிந்து கொள்ள முடிகிறது.

எல்லா தகவல்களையும் செல்போன் மூலம் தனியாக தெரிந்து கொள்வதே குற்றத்தின் தொடக்கமாகிறது. குறிப்பாக செல்போன் செயலிகள் (ஆப்ஸ்) அதிகரித்து விட்டன. இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்றவற்றின் மூலம் சிறார்களின் தொடர்புகள் அதிகரிக்கிறது. நல்லவர்களின் தொடர்பு மட்டுமின்றி கெட்டவர்களின் சகவாசமும் எளிமையாக கிடைக்கிறது.

யாரென்றே தெரியாத நபர்களுடன் கூட பேச முடிகிறது. அவர்களை எளிதாக நம்பியும் விடுகிறார்கள். பெண் குழந்தைகளை வளர்ப்பதில் தந்தையை காட்டிலும், தாய் முக்கியமானவர். அவருக்குதான் பொறுப்புகள் அதிகம். இது நவீன உலகம், குடும்பத்தில் தாய், தந்தை சம்பாதிக்க வேண்டியது அவசியம் தான். ஆனால் சம்பாதிப்பதை விட குழந்தைகளின் வாழ்க்கை முக்கியம் என்பதை பெற்றோர் உணர வேண்டும். என் குழந்தையை நான் தான் பார்ப்பேன் என்ற மனநிலைக்கு பெற்றோர் வர வேண்டும். தாய், தனது பெண் குழந்தையை கண்ணும் கருத்துமாக கவனிக்க வேண்டும்.

அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையையும் உற்று நோக்க வேண்டும். குழந்தைகளின் கையில் எந்த வகையான செல்போன் இருக்கிறது, அதில் என்னென்ன தகவல்களை அவர்கள் பார்க்கிறார்கள், தேவைக்கு தான் செல்போன் பயன்படுத்துகிறார்களா என்பது குறித்த அனைத்து தகவல்களையும் தெரிந்து வைக்க வேண்டும். தற்போது பள்ளிகளில் நேரடி வகுப்புகள்தான் நடக்கின்றன. எனவே, பள்ளி செல்லும் பெண், ஆண் குழந்தைகளுக்கு செல்போன் கொடுக்கக்கூடாது. அப்படியே பிள்ளைகள் செல்போன் பயன்படுத்துகிறார்கள் என்றால், தாய் அல்லது தந்தை என ஒருவர் அவர்களுடன் இருந்து அதனை கண்காணிக்க வேண்டும்.

ஆன்லைனில் வகுப்புகள் நடந்தால், அந்த வகுப்பு முடிந்த பின்னர் அவர்களிடம் இருந்து உடனடியாக செல்போன்களை வாங்கிவிட வேண்டும். கண் பார்வையில் செல்போன்கள் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். பிள்ளைகளின் கையில் செல்போனை கொடுத்து விட்டு பெற்றோர் தங்களின் வேலையை செய்யக்கூடாது. விஞ்ஞான உலகத்திற்கு ஏற்றார் போல் குழந்தையை வளர்க்க வேண்டும் என்றால் கட்டுப்பாடுகள் விதித்து தான் ஆக வேண்டும்.

செல்போனை "ஸ்கிரீனிங்" செய்தாலே பெருமளவு குற்றங்கள் தடுக்கப்படும். காலை, மாலை, இரவு என நேரம் கிடைக்கும் போதெல்லாம் பிள்ளைகளுடன் மனம்விட்டு பேச வேண்டும். பேசுவது குறைந்ததன் விளைவாகத்தான், செல்போன் பயன்பாடுகள் அதிகரித்துவிட்டன. பிள்ளைகளுக்கு நல்லது எது, கெட்டது எது என்பதை சொல்லி சொல்லி வளர்க்க வேண்டும். அந்த காலத்தில் எப்படி இருந்தோமோ, அதுபோல் தான் இந்த காலத்திலும் பெண் பிள்ளைகளை கவனமாக வளர்க்க வேண்டும். அவர்களுக்கு படிப்பில் சுதந்திரம் கொடுக்க வேண்டும். அதனை பிள்ளைகள் தவறாக பயன்படுத்துகிறார்களா என்பதையும் கண்காணிக்க வேண்டும். பெண் பிள்ளைகளை தைரியமாக வளர்க்க வேண்டும், எந்த பிரச்சினையை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்தும் எடுத்துரைக்க வேண்டும். ஏதாவது ஒரு தற்காப்பு கலையை கற்று கொடுப்பது கூடுதல் பலம்.

எல்லாவற்றையும் விட முக்கியமாக, பெண் குழந்தைகளின் பாதுகாப்பில் ஆசிரியர்களின் பங்கு முக்கியமானது. பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு நல்ல விதமாக போதனைகளை எடுத்துரைக்க வேண்டும். வகுப்பு தொடங்கும் முன்பு செய்தித்தாள்களில் வரும் குழந்தைகள் தொடர்பான குற்றச்சம்பவங்களை எடுத்துரைத்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். யாரும் தொட்டாலோ, தவறாக நடக்க முயன்றாலோ, தவறான கண்ணோட்டத்தில் பார்த்தாலோ அதுகுறித்து பெற்றோரிடம் அல்லது ஆசிரியர்களிடம் எடுத்துரைக்க வேண்டும் என அறிவுரை வழங்க வேண்டும்.

குறிப்பாக 12 வயது முதல் 14 வயதுக்குள் பிள்ளைகளுக்கு எடுத்துரைக்கும் அனைத்தும் அவர்களின் மனதில் எளிதாக பதிந்து விடும். எனவே, அந்த காலகட்டத்தில் நல்லவிதமாக கருத்துகளை எடுத்துரைக்க வேண்டும். அவ்வாறு எடுத்துரைத்தால் 18 வயதில் நல்ல கல்லூரியை தேர்வு செய்து வாழ்க்கையில் முன்னேறி விடுவார்கள். அதுபோல், 21 வயதிற்கு பின்னர்தான் திருமணத்தை பற்றி பேச வேண்டும். பெற்றோரின் தூண்டுதலால், சிறிய வயதில் திருமணம் செய்வதாலும் ஏராளமான உடல்சார்ந்த பிரச்சினைகள் ஏற்படுகிறது. குழந்தை திருமணம் நடத்த ஏற்பாடு செய்தால் 1098 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம்.

பெண் குழந்தைகளை மற்றொருவர் கட்டுப்படுத்தும் விதமாக வைக்கக்கூடாது. முதலில் பெற்றோர், 2-வதாக ஆசிரியர்கள், அடுத்தது பள்ளி, அடுத்தது சமூகம் இவை எல்லாம் பெண் குழந்தைகளை பாதுகாக்க வேண்டும். இது சரியாக இருந்தால், பெண் குழந்தைகள் தவறான பாதையை தேர்வு செய்ய மாட்டார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News