குழந்தை பராமரிப்பு
null

குழந்தைகளுக்கு பேச்சு தாமதம் ஏன்? கண்டுபிடிப்பது எப்படி?- டாக்டர் நித்யா

Published On 2024-07-01 12:41 GMT   |   Update On 2024-07-01 12:42 GMT
  • பேசுவதற்கு முதல் காரணம் என்று பார்த்தால் மரபணு பிரச்சனை ஒன்றாகும்.
  • குழந்தைகளுக்கு குழப்பம் ஏற்பட்டு இதுவும் பேசுவதற்கு தாமதத்தை ஏற்படுத்துகிறது.

தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு ஆடியோலஜிஸ்ட் & ஸ்பீச் பேத்தாலஜிஸ்ட் டாக்டர் நித்யா மாலைமலர்.காமிற்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

நிறைய பெற்றோர்களுக்கு நமது குழந்தை எப்போது பேசும் என்பதில் ஆர்வமாக இருப்பார்கள். ஆனால் சில குழந்தைகள் குறிப்பிட்ட வயதில் பேசிவிடுவார்கள். சில குழந்தைகள் பேசுவதற்கு தாமதம் ஆகிறது.

குழந்தைகள் பேசுவதற்கு தாமதம் ஆகிறது என்றால் அதற்கு என்ன காரணம்?

பேசுவதற்கு முதல் காரணம் என்று பார்த்தால் மரபணு பிரச்சனை ஒன்றாகும். எடுத்துக்காட்டாக அப்பாவே, அம்மாவே தனது குழந்தை பருவத்தில் தாமதமாக பேசி இருக்கலாம். அதனால் குழந்தையும் தாமதமாக பேசுவாங்க.

கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் கூட்டுக் குடும்பம் என்ற ஒன்று இருந்தது, அதனால் குழந்தைகளுக்கு பேசுவது, புரிந்து கொள்வது போன்ற பிரச்சனையாக இல்லை. ஆனால் இந்த காலக்கட்டத்தில் அம்மா, அப்பா, குழந்தை என்று குறுகிய வட்டத்தில் வளர்வதால் குழந்தைகளிடம் அந்த புரிதல் என்பது இல்லாமல் இருக்கிறது. இப்போது உள்ள குழந்தைகள் அதிகப்படியாக தனிமையிலேயே இருக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. அவர்களுடன் பேசி விளையாட தாத்தா, பாட்டி, அப்பா என ஆட்கள் இல்லை இதுவும் பேசுவதில் தாமதத்திற்கு காரணமாக உள்ளது.

மேலும் குழந்தைகளுக்கு மொழி ஒரு பெரும் பிரச்சனையாக இருக்கிறது. நாம் வீட்டில் தமிழ் மொழியில் பேசுகிறோம். ஆனால் போன் மூலம் ஆங்கிலத்தில் குழந்தைகளுக்காக பாடல்கள் வைக்கிறோம். இதனால் குழந்தைகளுக்கு குழப்பம் ஏற்பட்டு இதுவும் பேசுவதற்கு தாமதத்தை ஏற்படுத்துகிறது.

போன் மூலம் பாடல்கள், கதைகள் போன்றவற்றை அறிவதால், முகம் பார்த்து பேசுதல் என்பது இல்லாமல் போய்விடுகிறது. 2 வயதிலேயே குழந்தைகள் போன்களின் மூலம் பாடல், படிப்பு என கற்றுக் கொள்கிறார்கள். ஒரு சமயம் இந்த போன் சாதகமாக இருந்தாலும், 100 குழந்தைகளில் 3 குழந்தைகளுக்கு மரபணு பிரச்சனை இருக்கும் போது போன் பார்ப்பதால் பேசுவதில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது.


ஒரு குழந்தை எந்த வயதில் இருந்து பேச தொடங்கும்? எந்த வயதில் இருந்து நல்லா பேச தொடங்கும்? இல்ல பேசுவதில் தாமதம் என்று நாம் எப்படி கண்டுபிடிப்பது?

ஒரு குழந்தை பிறந்தவுடனேயே பேச தொடங்கிவிடும். பசி என்றால் அழுதால் அதுவும் பேசுவதற்கு முதல் நிலை ஆகும்.

ஒரு வயதில் குழந்தை அம்மா, அப்பா என்று ஆரம்பிக்கும்.. படிப்டபடியாக 2 வயதில் 2 வார்த்தைகைள் பேசும். 3 மூன்று வார்த்தைகள் பேசும்.

மூன்று வயது ஆன பிறகும் குழந்தைகள் அம்மா, அப்பா என்ற வார்த்தைகளை தவிர வேறு எதுவும் பேச வில்லை என்றால் மருத்துவரை அணுக வேண்டும்.

குழந்தைகள் பேசுவதற்கு எவ்வளவு நாள் காத்திருக்கலாம்?

நாங்கள் தனி குடும்பமாகதான் இருக்கிறோம். இருவரும் வேலை செல்கிறோம் வேலைக்கு ஆட்கள் வைத்து பார்க்கிறோம் என்றால், அந்த குழந்தையுடன் தொடர்பில் இருப்பவர்கள் எப்படி வைத்திருக்கிறார்கள் என்பதை பார்க்க வேண்டும். நம் குழந்தை மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தரவேண்டும்.

காத்திருக்கும் நாள் என்பது அதிக பட்சமாக 3 முதல் 6 மாதமாக இருக்கலாம். 2 அல்லது 3 வயது ஆகியும் குழந்தை பேசவில்லை என்றால் பேச்சு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் சென்று பார்ப்பது நல்லது. மருத்துவர்களிடம் இது வெறும் பேச்சு தாமதம் மட்டுமா? அல்லது குழந்தைக்கு வேறு ஏதேனும் பிரச்சனை இருக்கா என்று கேட்டு அறிந்த கொள்ளலாம்.

இந்த இடைப்பட்ட காலத்தில் போன் உபயோகிப்பதை நிறுத்திக் கொள்வதும் நல்லது. நீங்கள் மருத்துவரை அணுகும் போது குழந்தைகளுக்கு ஆர்டிசமோ, எடிஎச்டியோ இருக்கலாம் என்று சொன்னால் இன்னும் அதிக கண்காணிப்பு கொடுக்க வேண்டி வரும்.

குழந்தைகள் பேசுவதில் தாமதம் என்றால் எந்த மருத்துவரை பார்க்க வேண்டும்? குழந்தை நல மருத்துவரா? அல்லது ஒரு தெரபிஸ்டை போய் பார்க்கணுமா?

நீங்கள் குழந்தை நல மருத்துவரையும் பார்க்கலாம். ஸ்பீச் தெரபிஸ்ட்டையும் போய் பார்க்கலாம். இரண்டு பேரும் உங்களை வழி நடத்துவார்கள்.

தெரபிஸ்டை போய் பார்க்கும் போது எந்த மாதிரியான நடைமுறைகள் இருக்கும்?

முதலில் பெற்றோர் சார்ந்த கேள்விகள் இருக்கும். குழந்தைகளின் புரிதல் திறன், பேசும் திறன் எப்படி இருக்கு என்று பார்ப்போம். 3 வயது குழந்தைக்கு 1 வயதிற்கான புரிதல் திறன் தான் இருக்கு, பேசும் திறன் 8 மாதத்திற்கு தான் இருக்கு என்றால் அந்த குழந்தையால் ஏன் அடுத்தவர்களை பார்த்து கற்று கொள்ள முடியவில்லை என்று பார்ப்போம்.


யார் யாரெல்லாம் தெரபிஸ்ட்டை பார்க்கலாம்? குழந்தைகள் மட்டுமா? அல்லது பெரியவர்களும் பார்க்கலாமா?

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஸ்பீச் தெரபிஸ்ட்டை பார்க்கலாம். குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகள், பேச முடியாத குழந்தைகள், மென்று சாப்பிட முடியாத குழந்தைகள், திக்கி பேசும் குழந்தைகள், உச்சரிப்பு குறைப்பாடு உள்ள குழந்தைகள், டீன் ஏஜ் இருந்து அடல்ட் ஏஜ் வரும், குரலில் மாறுபாடு இருக்கும் குழந்தைகள், உதாரணமாக ஆண் குரல் பெண் போலவும், பெண் குரல் ஆண் போலும் இருக்கும் அது போல் உள்ள குழந்தைகள், விபத்தால் குரல் திறன் இழந்தவர்கள், பக்கவாதம் வந்து குரல் இழந்தவர்கள் என மேற்கண்ட அனைவரும் ஸ்பீச் தெரபிஸ்டை பார்க்க வேண்டும்.

பேச்சு தாமதத்திற்கும் ஆர்டிசத்திற்கு தொடர்பு இருக்கா?

ஒரு குழந்தைக்கு வேறும் பேச்சு தாமதம் மட்டும் தான் இருக்கு என்றால் அந்த குழந்தைக்கு புரிதல் திறன் நன்றாக இருக்கும். நம் கண் பார்த்து பேசுவாங்க, நம்ம என்ன சொன்னாலும் செய்வார்கள்.

ஆனால் ஆர்டிசம் என்பதில் நிறைய விஷயங்கள் உள்ளடக்கி உள்ளது. பேச்சு தாமதம் இருக்கும், புரிதல் திறன் குறைவாக இருக்கும், செய்ததையே திரும்ப திரும்ப செய்வார்கள் இதெல்லாம் ஆர்டிசத்துடன் தொடர்புடையது. ஆர்டிசத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு பேச்சு தாமதம் இருக்கும். ஆனால் பேச்சுதாமதம் இருக்கும் குழந்தைகளுக்கு ஆர்டிசம் இருக்காது.

திக்கு வாய் உள்ள குழந்தைகளை தெரபி மூலம் சரிசெய்ய முடியுமா?

திக்கு வாய் என்பது ஒரு நோய் கிடையாது. திக்கு வாய் என்பது ஒரு குறைபாடு சம்பந்தப்பட்ட விஷயம். இதற்க பல்வேறு பயிற்சி மூலம் இதை சரிசெய்ய முடியும். இது குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களுக்கு உள்ளது. இதற்கு 3 மாதம் தெரபி எடுத்தாலே சரி செய்து விடலாம்.

ஆண்ணிற்கு ஒரு பெண்ணின் குரல் இருப்பது ஒரு பிரச்சனையாக உள்ளது அதை சரிசெய்ய முடியுமா?

இந்த குரல் மாற்றம் என்பது ஹார்மோன்ஸ் சம்பந்தபட்ட விஷயம். இதை சரிசெய்ய முடியும், இதற்கு முறையான தெரபிகள் மற்றும் பயிற்சிகள் உள்ளது. நிறைய பேருக்கு 3 அமர்வுகளில் சரியாகி இருக்கிறது. ஒரு சிலருக்கு 10 அமர்வுகளில் சரியாகி உள்ளது. ஆண்களுக்கு விரைவில் குணப்படுத்தலாம் ஆனால் பெண்களுக்கு கால தாமதமாகும்.

குழந்தைகள் போன் பயன்படுத்தலாம் ஆனா அது அளவு இருக்கனும்னு சொன்னீங்க.. எந்த அளவு என்று சொல்லுங்கள்...

உலக சுகாதாரத்துறை கருத்துப்படி, 0-2 வயது குழந்தைகளுக்கு அதிகபட்சமாக போன் காண்பிக்க கூடாது என்றும் அந்த வயது குழந்தைகளில் மூலை நன்கு வளர்ச்சியடையும் காலம். அந்த நேரத்தில் போன்களை பார்க்கும் போது அவர்களது உலகம் அந்த போனிலேயே முடிந்து விடும்.

ஆனால் 2 வயது மேல் போன் கொடுக்கலாம். ஒரு நாளைக்கு 1மணி நேரம் கொடுக்கலாம். குழந்தைகள் போன் உபயோகிக்கும் போது கண்டிப்பாக பெற்றோர்கள் அருகில் இருக்க வேண்டும்.


பேச்சு தாமதம் இருக்கும் குழந்தைகளின் பெற்றோர் செய்ய வேண்டியது என்ன?

குழந்தைகளுடன் பெற்றோர்கள் நேரம் செலவிட வேண்டும் இது மிகவும் முக்கியமான ஒன்று. குழந்தைகளை அந்த வயதுடைய குழந்தைகளுடன் பழக செய்ய வேண்டும்.

குழந்தைகள் துரு துரு என்று இருந்ததால் என்ன பண்ணனும்?

குழந்தை என்றால் துரு துருனு தான் இருக்கும். ஆனால் ரொம் துரு துருனு இருந்தால் கண்டிப்பாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம். குழந்தை துருதுருனு இருக்கு ஆனா நல்ல பேசுது, விளையாடுது, புரிஞ்சுக்குது என்றால் நீங்கள் பயப்படவே தேவையில்லை.

இவ்வாறு டாக்டர் நித்யா அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News