இந்தியா (National)

இந்திய வரலாற்றில் மத ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த ஒரே கட்சி காங்கிரஸ் தான்: ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு

Published On 2023-04-27 03:47 GMT   |   Update On 2023-04-27 06:11 GMT
  • பா.ஜனதாவின் கொள்கைகளை மறைக்க ஒன்றும் இல்லை.
  • சாதி, மத அடிப்படையிலான பாகுபாட்டை பா.ஜனதா நம்புவது இல்லை.

பெங்களூரு :

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் நேற்று பெலகாவி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து பா.ஜனதா தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு ஓட்டு சேகரித்தார். காக்வாட் தொகுதியில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

இந்திய வரலாற்றில் மத ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த கட்சி என்று ஒன்று இருந்தால் அது காங்கிரஸ். அக்கட்சி இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் பெயரில் அரசியல் செய்கிறது. இத்தகைய குறுகிய மனப்பான்மையுடன் அரசியல் செய்யவே கூடாது. முஸ்லிம் சமுதாயத்தை கவரும் நோக்கத்தில் அவர்களுக்கு மத அடிப்படையில் 4 சதவீத இட ஒதுக்கீட்டை காங்கிரஸ் வழங்கியது.

பொருளாதாரத்தில் நலிவடைந்த முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கி இருந்தால் அதை நாங்கள் வரவேற்று இருப்போம். ஆனால் இந்திய அரசியல் சாசனம், மத அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை அனுமதிப்பது இல்லை. பா.ஜனதாவின் கொள்கைகளை மறைக்க ஒன்றும் இல்லை. ஒட்டுமொத்த உலகத்திற்கும் எங்கள் கட்சியின் குணம் என்னவென்று தெரியும்.

சாதி, மத அடிப்படையிலான பாகுபாட்டை பா.ஜனதா நம்புவது இல்லை. நாங்கள் நீதி மற்றும் மனித தன்மையில் நம்பிக்கை கொண்டுள்ளோம். 12-வது நூற்றாண்டின் சமூக சீர்திருத்தவாதி பசவண்ணரின் கொள்கைகளை நாங்கள் பின்பற்றுகிறோம். அந்த கொள்கைகள் அடிப்படையில் தான் பா.ஜனதா செயல்பட்டு வருகிறது. கர்நாடக மக்கள் பா.ஜனதாவுக்கு மூன்றில் 2 பங்கு இடங்களை வழங்கி தனிப்பெரும்பான்மை பலத்தை வழங்க வேண்டும்.

இவ்வாறு ராஜ்நாத்சிங் பேசினார்.

Tags:    

Similar News