வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொண்டுசெல்லப்படுகிறதா? பறக்கும் படை சோதனை
- தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தது.
- தமிழக-கர்நாடக எல்லையான புளிஞ்சூர் சோதனை சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள்.
தாளவாடி:
கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 10-ந் தேதி 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடக்கிறது. இதையடுத்து தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தது.
இதையடுத்த பறக்கும் படை அமைக்கப்பட்டு அவர்கள் மாநிலம் முழுவதும் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக மாநில எல்லைகளில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். வெளி மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்கள் தீவிர சோதனைக்கு பிறகே கர்நாடகாவுக்குள் அனுமதிக்கப்படுகிறது.
இந்நிலையில் தமிழக-கர்நாடக எல்லையான புளிஞ்சூர் சோதனை சாவடியில் தமிழகத்தில் இருந்து கர்நாடகாவுக்குள் செல்லும் பஸ், கார், வேன் போன்ற அனைத்து வாகனங்களையும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனை நடத்தி வரு கிறார்கள். மேலும் வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா? என்று தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். அதோடு வாகன எண், பெயர், முகவரி, என்ன காரணத்துக்காக வருகிறீர்கள் என்று கேட்டு குறித்து கொள்கிறார்கள். கர்நாடக மாநில தேர்தலையொட்டி விடிய, விடிய பறக்கும் படையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதே போல் பர்கூர்-கர்நாடக எல்லை யிலும் பறக்கும் படையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.