பாராளுமன்ற தேர்தலில் மதசார்பற்ற கட்சிகள் ஒன்று சேர வேண்டும் - திருமாவளவன்
சென்னை:
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அளித்த பேட்டி வருமாறு:-
கேள்வி:- கர்நாடக தேர்தல் முடிவுகள் பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்:- பா.ஜனதா அதிக இடங்களில் வெற்றி பெற்றாலும் ஆட்சியை கைப்பற்ற முடியவில்லை. கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் சுமார் 50 இடங்களை காங்கிரஸ் கட்சி இழக்கும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. தேவேகவுடா தலைமையிலான மதசார் பற்ற ஜனதாதளம் 37 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அதிகாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக மாறியுள்ளது.
இதன்மூலம் மதசார்பற்ற சக்திகளின் வாக்குகள் சிதறினால் பா.ஜனதா வலிமை பெருகும் என்று தெரிகிறது. தேர்தலுக்கு முன்பே காங்கிரஸ் கட்சியும் மதசார்பற்ற ஜனதா தளமும் கூட்டணி வைத்திருந்தால் பா.ஜனதாவை எளிதாக வீழ்த்தியிருக்க முடியும்.
கே:- கர்நாடகாவில் காங்கிரஸ் தோல்வி அடைந்துள்ள நிலையில் நீங்கள் காங்கிரசுடன் மதசார் பற்ற சக்திகள் இணைய வேண்டும். என்று பேசுவது சரியா?
ப:- கர்நாடக தேர்தலில் பா.ஜனதா 104 இடங்களில் வெற்றிபெற்று இருந்தாலும் அவர்கள் காங்கிரசைவிட குறைவான சதவீத வாக்குகளை பெற்று இருக்கிறார்கள். காங்கிரஸ் 75 இடங்களில் வெற்றிபெற்று இருந்தாலும் பா.ஜனதாவை விட கூடுதலான வாக்குகளை பெற்று இருக்கிறது.
எனவே காங்கிரஸ் பலவீனப்பட்டுவிட்டது என்று சொல்ல முடியாது. பாராளுமன்ற தேர்தலின் போது பா.ஜனதாவை வீழ்த்தும் அளவிற்கு வலிமையுள்ள மாற்று காங்கிரஸ் தான்.
காங்கிரசுடன் இணைந்து இடதுசாரிகள் உள்ளிட்ட ஜனநாயக சக்திகள் தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு. அதில் உறுதியாக இருக்கிறோம்.
கே:- கூவத்தூரில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை அடைத்து வைத்தது போல கர்நாடகாவிலும் நடப்பதாக தெரிகிறதே?
ப:- மதசார்பற்ற ஜனதாதளம் மற்றும் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை விலைபேசும் முயற்சியில் பா.ஜனதா தீவிரமாக இறங்கி உள்ளது. எனவே தங்கள் உறுப்பினர்களை தக்கவைத்து கொள்ளும் முயற்சியில் அவர்கள் ஈடுபடுகின்றனர்.
கே:- கர்நாடக தேர்தல் முடிவு தமிழகத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்?
ப:- மதசார்பற்ற கட்சிகள் ஒருங்கிணைந்து பயணப்பட வேண்டும் என்பதை கர்நாடக தேர்தல் மிக அழுத்தமாக வெளிப்படுத்துகிறது. எனவே தி.மு.க. தலைமையிலான தோழமை கட்சிகள் இன்னும் வலுவாக இணக்கமுடன் செயல்படும் என்று நம்புகிறேன்.
கே:- விடுதலை சிறுத்தை கட்சிகளின் விருது வழங்கும் விழாவில் கேரள முதல்வர் பங்கேற்காதது ஏன்?
ப:- அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்ததால் பயணம் செய்ய இயலவில்லை. அதனால் அறநிலையத் துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்தரை அனுப்பி வைத்தார். அவர் விழாவில் பங்கேற்று முதல்வருக்கு பதிலாக சிறப்புரை ஆற்றினார்.
இவ்வாறு அவர் கூறினர்.
#Thirumavalavan #Parliamentelection #Karnatakaassemblyelection