பார்த்து படிப்பது பழைய ஸ்டைல்.. அருகில் நிற்பவர் சொல்வதை அப்படியே ஒப்பித்த மகா. முதல்வர் - வீடியோ
- பிரதமர் மோடியும் மகாராஷ்டிராவில் பிரச்சரம் செய்து வருகிறார்
- சுயமாக பேசத் தெரியாத அரசியல்வாதிகள் டெலிபிராம்டரை பார்த்து பேசுவது அரசியல் களத்தில் கேலிக்குள்ளாகும்
மகாராஷ்டிரா மாநிலத்தில் வருகிற 20-ந்தேதி ஒரே கட்டமாக 288 தொகுதிகளுக்குத் தேர்தல் நடைபெற இருக்கிறது. களத்தில் காங்கிரஸ், சரத் பவார், உத்தவ் தாக்கரேவின் மகாவிகாஸ் அகாதி இந்தியா கூட்டணியும், பாஜக, அஜித் பவார், ஏக்நாத் ஷிண்டே மகாயுதி கூட்டணி உள்ளன.
இரண்டு கூட்டணியில் தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி உள்ளது. பிரதமர் மோடியும் மகாராஷ்டிராவில் தற்போது பிரச்சாரம் செய்து வருகிறார். இந்நிலையில் தேர்தல் பிரசாரத்தின்போது முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அருகில் இருப்பவர் கூறுவதை அப்படியே மைக்கில் பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.
லாத்தூர் [Latur] கிராம புறநகரில் உள்ள அவுசா [Ausa] என்ற இடத்தில் பிரச்சாரம் செய்த ஏக்நாத் ஷிண்டே பக்கத்தில் இருக்கும் பாஜக பிரமுகர் அரசுத் திட்டங்களின் பெயர்களுடன் சொல்ல சொல்ல மைக்கில் அதை அப்படியே ஒப்பிக்கும் இந்த வீடியோவை எதிர்க்கட்சிகள் டிரண்ட் செய்து வருகின்றன.
சுயமாக பேசத் தெரியாத அரசியல்வாதிகள் டெலிபிராம்டரை பார்த்து பேசுவது அரசியல் களத்தில் கேலிக்குள்ளாகும் விஷயமாக இருந்த நிலையில் தற்போது டெலிபிராம்டர் தொழில்நுட்பத்தையும் தாண்டி மனிதனை பிராம்டராக மகா முதல்வர் பயன்படுத்தியிருப்பது விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.