செய்திகள்

எத்தனை ஸ்டாலின்-தினகரன் வந்தாலும் தமிழக அரசை கலைக்க முடியாது: ஜெயக்குமார் பேட்டி

Published On 2018-06-23 12:33 GMT   |   Update On 2018-06-23 12:51 GMT
எத்தனை ஸ்டாலின் மற்றும் தினகரன் வந்தாலும் தமிழக அரசை கலைக்க முடியாது என்று புதுக்கோட்டையில் நடந்த காவிரி நதிநீர் மீட்பு போராட்ட வெற்றி பொதுக்கூட்டத்தில் ஜெயக்குமார் பேசினார். #ministerjayakumar #dinakaran #mkstalin #tngovt
புதுக்கோட்டை:

புதுக்கோட்டையில் அ.தி.மு.க. சார்பில் காவிரி நதிநீர் மீட்பு போராட்ட வெற்றி விழா பொதுக்கூட்டம் புதுக்கோட்டை திருவப்பூரில் நடைபெற்றது. இதில் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்று பேசியதாவது: -

அ.தி.மு.க.வில் மட்டும்தான் கட்சி கொடி கட்டும் தொண்டர் , தேசிய கொடி கட்டிய காரில் பயணம் செய்ய முடியும்.ஜெயலலிதா இறந்த பிறகு மு.க.ஸ்டாலின் அ.தி.மு.க. ஆட்சியை கலைக்க வேண்டும் என பல்வேறு நாடகங்களை நடத்தியுள்ளார். சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட்ட மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. தி.மு.க. ஆட்சியில் போலீசாருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை இருந்தது.

அ.தி.மு.க. ஒரு நிலைப்பாடுதான் எடுக்கும். ஆனால் தி.மு.க. இரட்டை நிலைப்பாடு எடுத்து வருகிறது. ஒரு பக்கம் நாத்தீகம் பேசிக்கொண்டு இருக்கும் மு.க.ஸ்டாலினுக்கு சுக்கிர தோ‌ஷம் இருப்பதால் ஸ்ரீரங்கத்தில் சிறப்பு பூஜை செய்து அதன் பிரசாதம் ஸ்டாலினிடம் வழங்கப்பட்டுள்ளது.

2021-ம் ஆண்டு தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும். அதற்கு முன்பு சட்டமன்ற தேர்தல் வராது. நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும். உள்ளாட்சி தேர்தல் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு வந்தவுடன் வரும். உள்ளாட்சி தேர்தல் நாளைக்கு வந்தாலும் சரி, நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு வந்தாலும் சரி, சட்டமன்ற தேர்தல் 2021-ம் ஆண்டு வந்தாலும் சரி அனைத்து தேர்தல்களிலும் அ.தி.மு.க. தான் வெற்றி பெறும். 

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-


தினகரன் ஒரு சந்தர்ப்பவாதி. ஆட்சியை கலைக்க வேண்டும் என்று தி.மு.க.வோடு கூட்டணி சேர்ந்து திட்டமிட்டுள்ளார். எத்தனை தினகரன், ஸ்டாலின் வந்தாலும் தமிழக அரசை கலைக்க முடியாது டி.டி.வி. தினகரன் ஜெயலலிதாவிற்கும், அ.தி.மு.க.விற்கும் தொடர்ந்து துரோகம் செய்து வருகிறார். தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவி உள்ளார்கள் என்ற மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கருத்தை ஏற்க முடியாது. மக்கள் நீதிமய்யத்திற்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளிக்கலாம். ஆனால் மக்கள் ஆதரிக்கமாட்டார்கள். 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் குறித்த உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தங்க.தமிழ்ச்செல்வன் விமர்சிப்பது நீதிமன்ற பார்வைக்கு சென்று உள்ளது. இதற்கு நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும் .

காவிரி பிரச்சினையில் கர்நாடக முதல்வர் குமாரசாமியால் எதுவும் செய்ய முடியாது. அவர் தீர்ப்புக்கு முரணாக ஏதாவது செய்தால் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு முறையிட்டு தீர்வு காணும். 

இவ்வாறு அவர் கூறினார். 

கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் , முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.  #ministerjayakumar #dinakaran #mkstalin #tngovt
Tags:    

Similar News