செய்திகள்

ரஜினியும், கமலும் அரசியலில் இணைந்தால் தமிழகத்தில் புரட்சி நடக்காது, வறட்சி தான் ஏற்படும்: ஜெயக்குமார் பேட்டி

Published On 2018-07-06 02:44 GMT   |   Update On 2018-07-06 02:44 GMT
ரஜினியும், கமலும் இணைந்தால் தமிழகத்தில் புரட்சி வெடிக்காது, நிச்சயம் வறட்சி தான் ஏற்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். #ministerjayakumar #kamal #rajinikanth
சென்னை:

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சென்னை பட்டினப்பாக்கத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் கவர்னரின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுகிறது. குறிப்பாக தி.மு.க. செயல்தலைவர் நிறைய விமர்சனங்களை முன்வைக்கிறார். கவர்னர் விவகாரத்தில், மு.க.ஸ்டாலின் மாற்றி மாற்றி கருத்துகள் சொல்லி வருகிறார். தமிழக பொறுப்பு கவர்னராக வித்யாசாகர்ராவ் இருந்த சமயத்தில், ‘நிலையான கவர்னர் தேவை’ என்று கருத்து கூறினார். தற்போது நிலையான கவர்னராக பன்வாரிலால் புரோகித் இருந்தும், அவரின் செயல்பாடுகள் சரியில்லை என்று கூறிவருகிறார்.

கவர்னர் என்பவர் நிர்வாகத்தின் தலைவர் ஆவார். அதன்படி தான் தனது கடமையை ஆற்றுகிறார். அரசியலமைப்பு சட்டம் வகுத்துள்ள விதிமுறைகளின்படி தான் கவர்னர் செயல்படுகிறார். அதே அரசியலைப்பு சட்டத்துக்குட்பட்டு தான் அரசும் செயல்படுகிறது.

ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் அரசியலில் இணைந்தால் புரட்சி ஏற்படும் என்று நடிகர் விஷால் கருத்து தெரிவித்திருக்கிறார். நான் ஒன்றுமட்டும் தெளிவாக சொல்லிக்கொள்கிறேன். ரஜினியும், கமலும் இணைந்தால் தமிழகத்தில் புரட்சி வெடிக்காது, நிச்சயம் வறட்சி தான் ஏற்படும்.

தமிழகத்தில் நடப்பது அ.தி.மு.க. எனும் மக்களாட்சி. இந்த ஆட்சி என்றும் தொடரும். நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலிலும், 2021-ம் ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலிலும் அ.தி.மு.க. தான் வெற்றிபெறும். யார் ஒன்று சேர்ந்தாலும் தமிழகத்தில் எதுவும் நடக்காது.

இவ்வாறு அவர் கூறினார். #ministerjayakumar #kamal #rajinikanth
Tags:    

Similar News