செய்திகள்

அமித்ஷா பேசியதை எச்.ராஜா தவறாக மொழிபெயர்த்து விட்டார்- அமைச்சர் ஜெயக்குமார்

Published On 2018-07-10 05:02 GMT   |   Update On 2018-07-10 05:02 GMT
அமித் ஷா தமிழகத்தை பற்றி நல்ல விதமாக சொன்னதை எச்.ராஜா தவறுதலாக மாற்றி மொழி பெயர்த்து கூறியதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். #Amitshah #HRaja #Jayakumar
சென்னை:

தமிழகத்தில் பா.ஜன தாவை வலுப்படுத்தவும், பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து வெற்றி பெறுவது குறித்தும் நிர்வாகிகளுடன் தேசிய தலைவர் அமித்ஷா நேற்று ஆலோசனை நடத்தினார்.

அப்போது பேசிய அவர் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் ஊழல் அதிகமாக நடக்கிறது. அது தனக்கு வேதனை அளிப்பதாக குறிப்பிட்டார்.

அமித்ஷா இந்தியில் பேசியதை தேசிய செயலாளர் எச்.ராஜா தமிழில் மொழி பெயர்த்தார்.

அ.தி.மு.க.-பா.ஜனதா இடையே பரஸ்பர ஒற்றுமை இருந்து வருகின்ற நிலையில் அமித்ஷா ஊழல் பற்றி பேசியிருப்பது அரசியல் கட்சிகள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமித்ஷாவின் ஊழல் பேச்சு குறித்து மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமாரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் பா.ஜனதாவை பலப்படுத்துவதற்காக அமித்ஷா இந்த கூட்டத்தை கூட்டியிருந்தார். அது அவர்களுடைய கட்சியின் விருப்பம். அதில் தவறில்லை. அ.தி.மு.க.வை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்பதற்காக நாங்கள் கூட்டம் நடத்துவது போல பா.ஜ.க.வும் நடத்தியுள்ளது.


அந்த கூட்டத்தில் அமித்ஷா நுண்ணுயிர் பாசனம் (மைக்ரோ இர்ரிகே‌ஷன்) என்று பேசினார். அதனை எச்.ராஜா “சிறுநீர் பாசனம்” என்று தவறுதலாக மொழி பெயர்த்துள்ளார்.

அதுபோல அமித்ஷா தமிழகத்தை பற்றி நல்ல விதமாக சொன்னதை எச்.ராஜா தவறுதலாக மாற்றி மொழி பெயர்த்து கூறியுள்ளார். தமிழகத்தை பற்றி நன்றாகத்தான் அமித்ஷா சொல்லி இருப்பார். ஆனால் இவர்தான் தவறாக மாற்றி இருக்கிறார்.

இவ்வாறு அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.

அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருப்பது பற்றி எச்.ராஜாவிடம் கேட்டபோது அவர் கருத்து கூற மறுத்து விட்டார். #Amitshah #HRaja #Jayakumar
Tags:    

Similar News