செய்திகள்

மதசார்பற்ற இயக்கங்களுடன் கூட்டணிக்கு தயார் - தினகரன் பேட்டி

Published On 2018-07-24 05:10 GMT   |   Update On 2018-07-24 05:10 GMT
மதசார்பற்ற இயக்கங்களுடன் கூட்டணிக்கு தயார் என்று டி.டி.வி.தினகரன் நிரூபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #Dhinakaran

சென்னை:

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நிரூபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

எங்களுடன் லோக்சபா உறுப்பினர்கள் யாரும் இல்லை. எனவே மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தது பயத்தினாலா என்று எனக்கு தெரியாது. சில மாதங்களிலேயே தற்போதைய லோக்சபா முடிகிறது.

அதிகபட்சம் அடுத்த ஏப்ரல், மே மாதங்களுக்குள் தேர்தல் நடக்கும். தேர்தலுக்குப் பிறகு தமிழக மக்களுக்கு போராடாத தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்கள் யாரும் தொகுதிக்குள்ளேயே செல்ல முடியாது.

மக்கள் ஆதரவோடு, மக்களுக்காக போராடிக் கொண்டிருக்கிற அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தான் அடுத்த தேர்தலில் தமிழகத்தில் மாபெரும் வெற்றி பெறும்.


அதைத்தான் அரூரில் நடைபெற்ற கூட்டத்தில் 40 பாராளுமன்ற தொகுதி லட்சியம், அதில் 37 தொகுதி நிச்சயம் என்று சொன்னேன். மக்கள் விரும்பாத எந்தவொரு திட்டத்தையும், அம்மா வழியில் நாங்களும் தடை செய்வோம். உண்மையான வளர்ச்சியை கொண்டு வருவோம்.

எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் ஆகஸ்டு 15-ந்தேதிக்குள் நல்ல தீர்ப்பு வரும்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் என்னுடைய நல்ல நண்பர். இதுவரை நாங்கள் கூட்டணி பற்றி பேசவில்லை. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மக்கள் ஆதரவோடு இருக்கிறது என்பதை உணர்ந்து எங்களோடு எந்த இயக்கங்கள் வந்தாலும் அது மதச்சார்பற்ற இயக்கமாக இருந்தால் அவர்களுடன் நாங்கள் நிச்சயம் கூட்டணி வைக்க தயாராக இருக்கிறோம். நாங்கள் தி.மு.க. வுடன் கூட்டணி வைக்க முடியாது.

வருமான வரித்துறை நியாயமான நடவடிக்கையை எடுத்துக் கொண்டிருப்பதாகத்தான் நான் நினைக்கிறேன். எஸ்.பி.கே. நிறுவனத்தில் நடைபெறும் சோதனை இத்துடன் நிற்காது. இன்னும் தொடரும் என்றுதான் நினைக்கிறேன்.

8 வழிச்சாலைக்கு எனக்கு தெரிந்தவரை இன்னும் டெண்டர் வெளியிடப்படவில்லை. ஆட்சி போவதற்குள் ஏதாவது பார்த்து விடலாம் என்று எடப்பாடி பழனிசாமி பார்க்கிறார்.

என்னை மாமியார் வீட்டுக்கு போய் விடுவார் என்று சொன்னார். தற்போது ஆட்சியில் இருப்பவர்கள் மாமியார் வீட்டுக்கு போகும் நேரம் நெருங்கி விட்டது. எல்லோரும் தொடைநடுங்கி. வெளியில் வருவதற்கே பயந்து கொண்டு உள்ளார்கள்.

ஜெயலலிதா மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றபோது உயிரோடு இருந்தார்கள் என்பதை பழனிசாமியே தற்போது ஒத்துக் கொள்கிறார். பிறகு எதற்காக விசாரணை ஆணையம். பன்னீர்செல்வம் கேட்டதற்காக மக்கள் வரிப் பணத்தில் விசாரணை ஆணையம் அமைத்திருக்கிறீர்களா? துரோகிகளின் 1½ ஆண்டு ஆட்சி காலத்திற்காக விசாரணை ஆணையம் நியாயமான முறையில் அமைக்கப்பட்டு தகிடுதத்தங்கள் அனைத்தும் வருங்காலத்தில் வெளிவரும்.

இவ்வாறு அவர் கூறினார். #Dhinakaran

Tags:    

Similar News