உள்ளூர் செய்திகள்

நில மீட்பு போராட்டத்தில் ஈடுபட்ட 149 பேர் கைது

Published On 2023-06-06 09:42 GMT   |   Update On 2023-06-06 09:42 GMT
  • தங்கள் நிலங்களை வருவாய்த்துறையினர் அளந்து கொடுக்கவில்லை எனக் கூறி கோஷங்கள் எழுப்பினார்கள்.
  • போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, 110 ஆண்கள், 39 பெண்கள் உட்பட, 149 பேரை கைது செய்தனர்.

 கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி அடுத்த கங்கலேரி ஊராட்சிக்கு உட்பட்ட மரிக்கம்பள்ளி கிராமத்தில், 30 பேருக்கு பிரித்து வழங்குவதற்காக, 1.25 ஏக்கர் நிலம் ஆதிதிராவிட நலத்துறை சார்பில் கடந்த, 1984-ம் ஆண்டு கையகப்படுத்தப்பட்டது. ஆனால் இது பயனாளிகளுக்கு வழங்கப்படவில்லை.

இதையடுத்து நிலத்தின் உரிமையாளர்கள், தங்களுக்கு அந்த நிலத்தை திரும்ப தரும்படி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த நிலையில் ஆதிதிராவிடத்துறை சார்பில் ஒதுக்கப்பட்ட நிலங்களை பயனாளிகளுக்கு பிரித்து தருமாறு கோரி மரிக்கம்பள்ளி கிராமத்தில் கிருஷ்ணகிரி விடுதலை சிறுத்தைகள் கட்சி பொறுப்பாளர் மாதேஷ், கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆலப்பட்டி ரமேஷ் ஆகியோர் தலைமையில், ஏராளமானவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் வழங்கப்பட்டு, 38 ஆண்டுகள் ஆன நிலையிலும், தங்கள் நிலங்களை வருவாய்த்துறையினர் அளந்து கொடுக்கவில்லை எனக் கூறி கோஷங்கள் எழுப்பினார்கள்.

தனி தாசில்தார், மற்றும் வருவாய் துறை அலுவலர்களை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். அவர்களை கிருஷ்ணகிரி தாலுகா இன்ஸ்பெக்டர் குலசேகரன் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தினர்.

அப்போது போலீசாரை மீறி சம்பந்தப்பட்ட நிலத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் செல்ல முயன்றனர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, 110 ஆண்கள், 39 பெண்கள் உட்பட, 149 போரை கைது செய்தனர்.

Tags:    

Similar News