உள்ளூர் செய்திகள்

மீட்புக் குழு

கொசஸ்தலை ஆற்று வெள்ளத்தில் சிக்கித் தவித்த 18 பேர் பத்திரமாக மீட்பு

Published On 2022-12-11 13:41 GMT   |   Update On 2022-12-11 13:41 GMT
  • கனமழையால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.
  • ஏரியின் பாதுகாப்பைக் கருதி உபரிநீரை அதிகாரிகள் திறந்துவிட்டனர்.

பெரியபாளையம்:

மாண்டஸ் புயல் காரணமாக பெய்த கனமழையால் திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.

ஏரியின் பாதுகாப்பைக் கருதி நேற்று முன்தினம் மற்றும் நேற்று ஏரியிலிருந்து உபரிநீரை அதிகாரிகள் திறந்துவிட்டனர். நேற்று 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டதால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

இதற்கிடையே, பெரியபாளையம் அருகே மஞ்சங்காரனை ஊராட்சியை சேர்ந்த கோட்டைக்குப்பம் கிராமம், ஈஸ்வரன் கோவில் பகுதியில் 60 பேர் வசித்து வந்தனர். இதில், 42 பேர் நேற்று முன்தினம் இரவு பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேறி உறவினர் வீடுகளுக்குச் சென்றுவிட்டனர்.

இந்நிலையில், கோட்டைக்குப்பம் பகுதியில் இருந்து 18 பேர் மட்டும் நேற்று வெளியேற முடியாமல் தவித்தனர்.

தகவலறிந்த பெரியபாளையம் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் பேரிடர் மீட்புப் படையினர் 10 பேர் கொண்ட குழுவினர் ரப்பர் படகு மூலம் அங்கு சென்றனர். அவர்களை பத்திரமாக படகு மூலம் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அதன்பின், அவர்கள் அனைவரும் மஞ்சங்காரணையில் உள்ள சமுதாயக்கூடத்தில் தங்க வைக்க வருவாய் ஆய்வாளர் சரவணன் தலைமையில் வருவாய்த்துறையினர் ஏற்பாடு செய்தனர். தங்களது உறவினர் வீட்டிற்கு செல்வதாக கூறி அவர்கள் அனைவரும் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

கொசஸ்தலை ஆற்றை கடக்க முடியாமல் 18 பேர் அவதிப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News