உள்ளூர் செய்திகள்

வடமாநில வியாபாரிகளை தாக்கி, எல்இடி டிவியை பறித்துச் சென்ற 2 பேர் சிறையில் அடைப்பு

Published On 2023-05-21 13:17 GMT   |   Update On 2023-05-21 13:17 GMT
  • வடமாநில வியாபாரிகளை தாக்கி எல்இடி டிவியை பறித்துச் சென்ற 2 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
  • தலைமறைவான மற்றொருவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

பெரியபாளையம்:

உத்தர பிரதேசம் மாநிலம், முசாபர் மாவட்டத்தைச் சேர்ந்த சதாம் (32) என்பவர் கடந்த சில ஆண்டுகளாக திருவள்ளூரில் தங்கி இருந்து எலக்ட்ரானிக் பொருட்களை ஊர் ஊராக தனது மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்று விற்பனை செய்து வந்தார்.

இந்நிலையில்,நேற்று முன்தினம் மாலை ஊத்துக்கோட்டை அருகே உள்ள வடதில்லை கிராமத்திற்கு ஒரு எல்.இ.டி டிவி, 2 ஹோம் தியேட்டர் ஆகியவற்றை மோட்டார் சைக்கிளில் எடுத்துக்கொண்டு உதவியாளர் ஒசாமா (19) என்பவரை அழைத்துக் கொண்டு சென்றார்.

வடதில்லை கிராம எல்லைக்குச் சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர் கொண்ட மர்ம கும்பல் கத்தி முனையில் வழி மறித்து வடமாநில வியாபாரிகளை தாக்கிவிட்டு அவர்களிடம் இருந்த எல்இடி டிவி,ஹோம் தியேட்டர் ஆகியவற்றை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து வடமாநில வியாபாரி சதாம் பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். ஊத்துக்கோட்டை காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்தியபாமா தலைமையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கர்ணன், முதல் நிலைக் காவலர் ராஜு, காவலர்கள் முகமது அலி, மந்திரசேகர், பெருமாள் ஆகியோர் வழிப்பறியில் ஈடுபட்ட 2 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து எல்இடி டிவி மற்றும் ஹோம் தியேட்டரை பறிமுதல் செய்தனர்.

விசாரணையில், குற்றவாளிகள் மாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ராஜதுரை என்ற ஜெனிராஜ் (31), அரக்கோணத்தைச் சேர்ந்தவரும் தற்போது தாணிப்பூண்டியில் தங்கி இருப்பவருமான அப்துல் ரகுமான் (30) என்பதும் தெரிய வந்தது.

கைது செய்யப்பட்ட ராஜதுரை என்ற ஜெனிராஜ், அப்துல் ரகுமான் ஆகியோர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் பல வழக்குகள் நிலுவையில் இருப்பதும், பழைய குற்றவாளிகள் என்பதும் தெரியவந்தது. அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஊத்துக்கோட்டை முதல் நிலை குற்றவியல் நீதிமன்றம் மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர் செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

தலைமறைவான சென்றான்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கணேஷ் என்பவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

வடமாநில வியாபாரிகளை கத்திமுனையில் மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட குற்றவாளிகளில் இருவரை 4 மணி நேரத்தில் கைது செய்து பொருட்களை பறிமுதல் செய்த ஊத்துக்கோட்டை காவல் நிலைய போலீசாரை திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபாஸ்கல்யான், ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் குமார் ஆகியோர் பாராட்டினர்.

Tags:    

Similar News