மின்சாரம் தாக்கியதில் சேடை உழுத 2 மாடுகள் பலி: படுகாயம் அடைந்த கூலித்தொழிலாளி ஆஸ்பத்திரியில் அனுமதி
- விவசாய நிலத்தின் நடுவே இருந்த இரும்பு மின்சார கம்பத்தில் திடீரென மின்சாரம் பாய்ந்தது
- காயமடைந்த வாசுதேவனை திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பாகல்மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஏகாம்பரம். இவரது நிலத்தில் நெல் நடவு செய்வதற்காக சேடை உழும் பணி இன்று நடைபெற்றது. புன்னப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த வாசுதேவன்(வயது53) என்ற கூலி தொழிலாளி, இரண்டு காளை மாடுகளுடன் பலகையை அமைத்து சேடை உழுது கொண்டிருந்தார்.
இந்த விவசாய நிலத்தின் நடுவே இருந்த இரும்பு மின்சார கம்பத்தில் திடீரென மின்சாரம் பாய்ந்ததாம். இதனால் சேடை உழுது கொண்டிருந்த சேறு முழுவதும் மின்சாரம் பாய்ந்ததில் இரண்டு மாடுகளும் சேற்றில் விழுந்து துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பலியாகின. மின்சாரம் தாக்கியதால் வாசுதேவன் காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள்! என்று கூக்குரல் இட்டார்.
அருகில் இருந்தவர்கள் உடனடியாக மின்சாரக் கம்பத்துக்கு வரும் மின் இணைப்பை துண்டித்தனர். இதற்குள் வாசுதேவன் மயங்கி சேற்றில் விழுந்தார். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவரை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வெங்கல் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் தலைமையில் போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.