உள்ளூர் செய்திகள்

குட்டையில் 2 முதலைகள் நடமாட்டம்- பொதுமக்கள் அச்சம்

Published On 2024-09-16 05:51 GMT   |   Update On 2024-09-16 05:51 GMT
  • நீர்வழிக்குட்டையில் மேலும் ஒரு முதலை இருப்பது தெரியவந்தது.
  • முதலைகளை பிடிக்கும் பணிகள் தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

மேட்டுப்பாளையம்:

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பெள்ளேபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பட்டக்காரனூர் கிராமத்தில் உள்ள நீர்வழிக்குட்டையில் வடவள்ளி, தாளத்துரை, கோபி ராசிபுரம் உள்ளிட்ட பகுதிகள் வழியாக செல்லும் தண்ணீர் தேங்கி, பின்னர் மறுகால் பாய்ந்து பவானி ஆற்றை சென்றடைகிறது.

இந்த குட்டையில் கடந்தாண்டு பெய்த கனமழையால் தற்போது வரை 10 அடி அளவுக்கு தண்ணீர்தேங்கி உள்ளது.

இந்த நிலையில் பட்டக்காரனூர் நீர்வழிக்குட்டையில் ஒரு முதலை பதுங்கி இருப்பது தெரிய வந்தது.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராமவாசிகள் உடனடியாக சிறுமுகை வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

பின்னர் நீர்வழிக்குட்டையில் பதுங்கிய முதலையை பிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆனால் குட்டையில் அதிகளவில் சீமை கருவேல மரங்கள் இருப்பதால் அந்த முதலையை பிடிப்பது வனத்துறைக்கு சவால் மிகுந்த பணியாக உள்ளது.

எனவே பொதுமக்களின் பாதுகாப்பு கருதி நீர்வழிக்குட்டையில் இருந்து முதலை வெளியே வர முடியாத அளவில் வனத்துறையின்ர் வலைகளை மட்டும் கட்டிவிட்டு சென்றனர்.

இந்த நிலையில் பட்டக்காரனூர் கிராமத்தினர் அந்த பகுதிக்கு வந்து தற்செயலாக பார்வையிட்டனர்.

அப்போது நீர்வழிக்குட்டையில் மேலும் ஒரு முதலை இருப்பது தெரியவந்தது.

இதற்கிடையே நீர்வழிக்குட்டையில் தண்ணீர் வற்றத்தொடங்கி உள்ளதால் அந்த 2 முதலைகளும் கரையோரத்துக்கு வந்து படுத்து கிடப்பது தெரிய வந்தது.

தொடர்ந்து சிறுமுகை வனத்துறையினர் உடனடியாக நீர்வழிக்குட்டைக்கு வந்து ஆய்வு நடத்தி அங்கு 2 முதலைகள் தென்படுவதை உறுதி செய்தனர். பின்னர் அந்த முதலைகளை பிடிக்கும் பணிகள் தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

Tags:    

Similar News