உள்ளூர் செய்திகள் (District)

ஊட்டியில் நகை திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது

Published On 2023-04-12 09:10 GMT   |   Update On 2023-04-12 09:10 GMT
  • 2 பேர் அமர்ந்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருந்தனர்.
  • திருடிய நகைகளை பங்கு போடும்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஊட்டி

நீலகிரி மாவட்டம் ஊட்டி நகர தி.மு.க. அலுவலகம் செல்லும் சாலையில் 2 பேர் அமர்ந்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருந்தனர். ஒரு கட்டத்தில் தகராறாக மாறியது.

அப்போது அங்கு வந்த சிலர் சந்தேகத்தின் பேரில் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது மது போதையில் இருந்த அவர்கள் நிலை தடுமாறியவாறு முன்னுக்குப் பின் முரணாக பேசினர். மேலும் அவர்களிடம் நகை இருந்தது.

இதுகுறித்து ஊட்டி மத்திய போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் கனகராஜ், சுசீந்திரன், சிவகுமார் ஆகியோர் தலைமையான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

இதில் அவர்கள் மிஷனரி ஹில் பகுதியை சேர்ந்த கண்ணன்(50), உட்லான்ஸ் குப்பத்தை சேர்ந்த மோகன் (57) என்பதும், இவர்கள் கீழ் தலையாட்டுமந்துவை சேர்ந்த வருவாய் துறை அலுவலரான திம்மையா என்பவர் வீட்டில் 5 பவுன் நகை திருடியதும் தெரியவந்தது.

மேலும் திருடிய நகைகளை பங்கு போடும்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதால் சிக்கிக் கொண்டதும் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து 5 பவுன் நகையை மீட்டனர்.

5 பவுன் நகை திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட கண்ணன் மீது, ஊட்டி மத்திய போலீஸ் நிலையம் உள்பட பல்வேறு இடங்களில் ஏற்கனவே திருட்டு, அடிதடி, வழிப்பறி உள்ளிட்ட 33 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதற்காக கைது செய்யப்பட்டு பலமுறை சிறைக்கு சென்றுள்ளார். மேலும் கடைசியாக குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு, ஒரு வருட சிறை தண்டனை முடிந்து மீண்டும் வெளியில் வந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News