செய்திகள் (Tamil News)

காட்பாடி அருகே சரக்கு ரெயிலில் பற்றிய தீ - 7 மணி நேரம் போராடி அணைப்பு

Published On 2017-02-10 10:09 GMT   |   Update On 2017-02-10 10:09 GMT
காட்பாடி அருகே சரக்கு ரெயிலில் பற்றிய தீயை தீயணைப்பு துறையினர் 7 மணி நேரம் போராடி அணைத்தனர்.
வேலூர்:

சென்னை துறைமுகத்தில் இருந்து சேலம் மேட்டூர் அனல் மின் நிலையத்துக்கு நிலக்கரி ஏற்றிக்கொண்டு சரக்கு ரெயில் ஒன்று சென்றது.

அந்த ரெயில் காட்பாடி அருகே உள்ள சேவூர் என்ற இடத்தை கடந்தபோது, ரெயில் பெட்டியில் இருந்து தீ புகை கிளம்பியது. இதையடுத்து திடீரென 13 பெட்டிகளில் இருந்த நிலக்கரிகள் தீப்பிடித்து எரிய தொடங்கின. இதில் 5 பெட்டிகளில் நிலக்கரி கொழுந்து விட்டு எரிந்தது. உடனடியாக ரெயில் என்ஜின் டிரைவர் ரெயிலை நிறுத்தினார். பின்னர் அவர் அதுபற்றி காட்பாடி ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.

காட்பாடியில் இருந்து ரெயில்வே போலீசார் மற்றும் தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீப்பற்றிய நிலக்கரி பெட்டிகளில் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்க போராடினர். புகை மூட்டம் அதிகளவு இருந்ததால், தீயை அணைக்க முடியாமல் திணறினர். இதையடுத்து, ராணிப்பேட்டை மற்றும் வேலூரில் இருந்து மேலும் 2 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன.

மாவட்ட தீயணைப்பு அலுவலர் முருகேசன் தலைமையில் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

காலை 8 மணிக்கு பற்றிய தீயை மதியம் 3 மணி வரை சுமார் 7 மணி நேரம் போராடி அணைத்தனர்.

தீ பற்றிய பெட்டிகளில் சுமார் 10 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானதாகவும், ரூ.3 லட்சத்து 92 ஆயிரம் மதிப்பிலான நிலக்கரி மீட்கப்பட்டதாகவும் தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.

Similar News