செய்திகள் (Tamil News)

தர்மபுரி அருகே கடன் தொல்லையால் விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2017-03-03 10:26 GMT   |   Update On 2017-03-03 10:26 GMT
தர்மபுரி அருகே கடன் தொல்லையால் விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டம் மாரண்ட அள்ளியில் உள்ள எம்.செட்டி அள்ளி பகுதியை சேர்ந்தவர் முனிராஜ்(வயது 31). விவசாயி. இவருக்கு சொந்தமாக 1½ ஏக்கர் நிலம் அப்பகுதியில் உள்ளது. இந்த நிலத்தில் தக்காளி, வெண்டைக்காய், உருளைக்கிழங்கு, பீன்ஸ் உள்ளிட்ட பயிர்களை கடன் வாங்கி சாகுபடி செய்து வந்தார்.

இந்த பயிர்களுக்கு தேவையான தண்ணீரை அப்பகுதியில் உள்ள கிணறு மற்றும் சிறு ஓடைகளில் இருந்து பாய்ச்சி வந்தார். பின்னர் நாளடைவில் இந்த கிணறு மற்றும் ஓடைகளில் இருந்த தண்ணீர் முழுவதுமாக வற்றி வறண்டு விட்டது.

இதனால் சாகுபடி செய்த பயிர்களுக்கு தண்ணீர் பாய்க்க முடியாமல் போனது. மேலும் மழையும் கைகொடுக்கவில்லை. இதனால் சாகுபடி செய்த பயிர்கள் அனைத்தும் கருகியது.

இதையடுத்து பசுமாடு வாங்கி வளர்க்கலாம் என கருதி முனிராஜ் கடன் வாங்கி பசுமாடு ஒன்றையும் வாங்கினார்.பின்னர் அந்த பசுமாடும் சரியாக பால் கறக்கவில்லை. இதனால் முனிராஜ் கடும் அதிர்ச்சி அடைந்தார். பயிர் செய்தும் பலன் இல்லாமல் போனதாலும் பசுமாடு வாங்கியும் பலன் இல்லாமல் போனதாலும் கடன் சுமை ரூ.3 லட்சத்து 20 ஆயிரமாக அதிகரித்து.

கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தனர். பணத்தை திரும்ப கொடுக்குமாறு முனிராஜியிடம் தொடர்ந்து கடன் கொடுத்தவர்கள் கேட்டு வந்தனர்.

கடன் தொல்லை நாளுக்கு நாள் அதிகரிக்கவே நேற்று முனிராஜ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் குறித்து மாரண்ட அள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். முனிராஜ் உடல் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

Similar News