செய்திகள்

1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு சீருடை மாறுகிறது - பள்ளிகள் திறந்தவுடன் வழங்க ஏற்பாடு

Published On 2018-05-09 18:48 GMT   |   Update On 2018-05-09 18:48 GMT
1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு சீருடை மாறுகிறது. பள்ளிகள் திறந்தவுடன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை:

தமிழ்நாடு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் டாக்டர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தின் கீழ் 1-ம் வகுப்பு முதல் 8-வது வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு 4 செட் சீருடைகள் இலவசமாக வழங்கப்படுகிறது.

இந்த கல்வி ஆண்டு 1-ம் வகுப்பில் இருந்து 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு சீருடையின் நிறம் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி வெளிர் பச்சை சட்டை(அக்குவா கிரீன்), அடர் பச்சை கால் சட்டை (மெடோ கிரீன்) வழங்கப்பட உள்ளது.

6-ம் வகுப்பு முதல் 8-வது வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தற்போது வழங்கப்படும் வெளிர் பிரவுன் சட்டையும், பழுப்பு சிவப்பு கால் சட்டையும் தொடர்ந்து வழங்கப்பட உள்ளது.

இந்த சீருடைகளுக்கான துணிகளை தமிழக கைத்தறி மற்றும் ஜவுளித்துறை வழங்குகிறது. கோடை விடுமுறைக்கு பின் ஜூன் மாதம் பள்ளிக்கூடம் திறந்தவுடன் மாணவர்களுக்கு புதிய சீருடைகளை வழங்குவதற்கான ஆயத்தப்பணிகளை பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். 
Tags:    

Similar News