செய்திகள் (Tamil News)
முல்லைப் பெரியாறு பகுதியில் ஆய்வுக்கு வந்த மத்திய துணைக்குழுவினர்.

முல்லை பெரியாறு அணையில் துணைக்குழு ஆய்வு

Published On 2018-05-10 07:13 GMT   |   Update On 2018-05-10 07:13 GMT
முல்லைப் பெரியாறு அணையில் மத்திய துணைக்குழுவினர் இன்று ஆய்வுப்பணியில் ஈடுபட்டனர். #periyardam #MullaPeriyarDam
கூடலூர்:

முல்லைப் பெரியாறு அணையை கண்காணித்து பராமரிக்க உச்சநீதிமன்றம் 3 பேர் கொண்ட குழுவை அமைத்தது. இக்குழுவிற்கு உதவியாக 5 பேர் கொண்ட துணைக்குழு அமைக்கப்பட்டது. இக்குழுவில் மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் ராஜேஷ் தலைமையில் தமிழக பிரதிநிதிகளாக பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பாலசுப்பிரமணி, உதவி கோட்ட பொறியாளர் ஷாம் இர்வின் ஆகியோரும் கேரள அரசு பிரதிநிதிகளாக நீர்பாசனத்துறை உதவி செயற்பொறியாளர் ஷாஜி ஐசக், உதவி பொறியாளர் பிரசீத் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

கடந்த மார்ச் 6-ந் தேதி அணையின் நீர் மட்டம் 113.55 அடியாக இருந்தபோது துணைக்குழுவினர் அணையில் ஆய்வு செய்தனர். பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையினால் நீர் வரத்து அதிகரித்துள்ளது. மேலும் நீர் மட்டமும் கணிசமாக உயர்ந்து வருகிறது.

இந்நிலையில் மத்திய துணைக்குழுவினர் முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வுக்கு வந்தனர். தமிழக குழுவில் இடம்பெற்றுள்ள ஷாம் இர்வின் மட்டும் ஆய்வுக்கு வரவில்லை. அவர் டெல்லியில் நடைபெறும் நீர்பாசனத்துறை கூட்டத்தில் பங்கேற்பதால் ஆய்வுக்கு வரவில்லை என தெரிவிக்கப்பட்டது.


முல்லைப் பெரியாறு அணையில் மதகுகள், ‌ஷட்டர்கள் ஆகிய பகுதிகளை ஆய்வு செய்தனர். மேலும் பேபி அணையையும் பார்வையிட்டு அணைக்கு வரும் நீர் வரத்து, கசிவு நீர் விபரம் போன்றவற்றையும் அளவீடு செய்தனர். இதனைத் தொடர்ந்து மாலையில் குமுளியில் உள்ள கண்காணிப்பு குழு அலுவலகத்தில் துணைக்குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. அணையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு மற்றும் ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து துணைக்குழுவினர் தங்களது அறிக்கையை கண்காணிப்பு குழு தலைவரான மத்திய நீர் வள ஆணைய அணைப்பாதுகாப்பு பிரிவு தலைமைப் பொறியாளர் குல்சன்ராஜூக்கு அனுப்பி வைக்க உள்ளனர். #periyardam #MullaPeriyarDam
Tags:    

Similar News