செய்திகள்

ஆச்சி குறித்து கிண்டலான பேச்சு- நடிகை மனோரமாவை மனதில் வைத்தே கருத்து தெரிவித்ததாக அமைச்சர் விளக்கம்

Published On 2018-05-12 05:03 GMT   |   Update On 2018-05-12 05:03 GMT
நடிகை மனோரமாவை மனதில் வைத்தே ஆச்சி குறித்து கருத்து தெரிவித்தேன் என்று அமைச்சர் செல்லூர்ராஜூ கூறினார். #TNMinister #SellurRaju
மதுரை:

நடிகர் ரஜினிகாந்த் குறித்து மதுரையில் அமைச்சர் செல்லூர்ராஜு நிருபர்களிடம் கூறுகையில், “ரஜினி தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க முடியாது. வேண்டுமானால் காரைக்குடி ஆச்சியை பிடிக்கலாம்” என்று கருத்து தெரிவித்து இருந்தார்.

அவரது இந்த கருத்துக்கு காரைக்குடி நகரத்தார் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் பெண்கள் அவருக்கு எதிராக போராட்டத்திலும் ஈடுபட்டனர். அமைச்சர் செல்லூர் ராஜூக்கு செருப்புகளையும் பார்சலில் அனுப்பினர்.

அமைச்சர் செல்லூர் ராஜூ மன்னிப்பு கேட்க வேண்டும் என்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் நகரத்தார் சங்கம் புகார் அனுப்பி உள்ளது.

இந்த நிலையில் தான் தெரிவித்த கருத்துக்கள் குறித்து அமைச்சர் செல்லூர்ராஜூ விளக்கம் அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

அ.தி.மு.க. பெண்ணை தாயாக, தெய்வமாக மதிக்க கூடிய இயக்கமாகும். நாட்டிலேயே பெண்ணுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு ஆட்சியிலும், கட்சியிலும் தந்தவர் அம்மா. எனவே நாங்கள் ஒருபோதும் பெண்களை தவறாக பேச மாட்டோம்.


நடிகர் ரஜினிகாந்த் குறித்து நிருபர்கள் கேள்வி கேட்டபோது தமிழகத்தில் அவர் ஆட்சியை பிடிக்க முடியாது. வேண்டுமானால் காரைக்குடி ஆச்சியை பிடிக்கலாம் என்று நான் கூறியது ஒரு சமூகத்தை இழிவுபடுத்தும் நோக்கத்தில் அல்ல. ஆச்சி என்றாலே சினிமாவில் மனோரமாதான் நினைவுக்கு வரும். சினிமாவில் மனோரமாவை தாயாக கட்டிப்பிடித்து நடித்தார் ரஜினி. எனவே மனோரமாவை மனதில் வைத்தே இந்த கருத்தை தெரிவித்தேன். மற்றபடி இதில் எந்த உள்நோக்கமும் இல்லை.

இவ்வாறு அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார். #TNMinister #SellurRaju
Tags:    

Similar News