செய்திகள் (Tamil News)

காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவை மதிப்போம் - திருச்சியில் குமாரசாமி பேட்டி

Published On 2018-05-20 13:54 GMT   |   Update On 2018-05-20 13:54 GMT
காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மதித்து கர்நாடக அரசு செயல்படும் என திருச்சி விமான நிலையத்தில் மஜத கட்சியின் தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார். #Kumaraswamy #CauveryIssue
திருச்சி:

கர்நாடகத்தில் எடியூரப்பா ராஜினாமாவை தொடர்ந்து மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவர் குமாரசாமி வருகிற 23-ம் தேதி முதல் மந்திரியாக பதவி ஏற்க இருக்கிறார். 

38 இடங்களில் வெற்றி பெற்ற ஜே.டி.எஸ். கட்சிக்கு 78 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் ஆதரவு அளிக்கிறது. மெஜாரிட்டிக்கு 112 எம்.எல்.ஏ.க்கள் தேவை என்ற நிலையில், அதையும் தாண்டி 6 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு குமாரசாமிக்கு உள்ளது. 

இதற்கிடையே, திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு அவர் இன்று வருகை தந்து கர்நாடக தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்களின் சான்றிதழ்களை வைத்து சிறப்பு பூஜை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. 

இந்நிலையில், திருச்சி வந்த குமாரசாமி, காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மதித்து கர்நாடக அரசு செயல்படும் என தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மஜத கட்சி தலைவர் குமாரசாமி கூறியதாவது:
 
காவிரி விவகாரத்தில் இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முழு ஒத்துழைப்பு அளிப்பேன். காவிரி விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மதித்து கர்நாடக அரசு செயல்படும். ம.ஜ.த. - காங்கிரஸ் கூட்டணி அரசு, 5 ஆண்டுகள் முழுமையாக நிறைவு செய்யும். காங்கிரஸ் கட்சிக்கு துணை முதல்வர் பதவி தருவது பற்றி தற்போது எதுவும் கூற இயலாது என தெரிவித்தார். #Kumaraswamy #CauveryIssue
Tags:    

Similar News