செய்திகள்
புதிய பாலத்தை கனிமொழி எம்.பி. திறந்து வைத்த போது எடுத்த படம்

முதலமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தால் கலவரம் ஏற்பட்டுருக்காது- கனிமொழி

Published On 2018-05-28 08:46 GMT   |   Update On 2018-05-28 08:46 GMT
தூத்துக்குடியில் ஸ்டெர்லைடுக்கு எதிராக 100 நாட்கள் வரையில் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் அவர்களிடம் முதல் அமைச்சர் பேச்சு வார்த்தை நடத்தியிருந்தால் இது போன்று மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டிருக்காது என கனிமொழி கூறியுள்ளார்.#SterliteProtest #kanimozhi
திருவாரூர்:

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து வெட்டாற்றின் குறுக்கே ரூ.2 கோடியே 40 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கமுகக்குடி - அபிவிருத்தீஸ்வரம் இணைப்பு பாலத்தை கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தி.மு.க. தலைவர் கருணாநிதி மூலம் இந்த பாலம் திறக்கப்படாதது மிகப்பெரிய ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ள போதிலும் தமிழக அரசுடன் நடைபெற்ற 7 ஆண்டுகள் போராட்டத்திற்கு பின்னர் இந்த பாலம் தற்போது திறக்கப்பட்டது வெற்றி தான்.

மேலும் தமிழகத்திற்கு பிரதமர் மோடி முதல்வராக கிடைத்திருப்பது பெருமை. மோடியின் 4 ஆண்டு கால ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களும் பிளவு படுத்தப்பட்டு போராட்டங்களுக்கு தூண்டி விடும் அரசாக உள்ளது. குறிப்பாக சிறுபான்மையின மக்கள் தாங்கள் இந்தியர் என்ற உணர்வில்லாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தலித் மக்கள் அதிகமான தாக்குதலுக்குள்ளாகி உள்ளனர்.

இது மட்டுமின்றி பொருளாதாரத்தில் பின்தங்கியும், தொழில்கள் நசுக்கப்பட்டும் விட்டது. தூத்துக்குடி கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களை முதல்வரோ அல்லது அமைச்சர்களோ ஏன் பார்க்க செல்லவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு 144 தடை உத்தரவு உள்ளதால் செல்லவில்லை என்று முதல்வர் கூறுகிறார்.



ஒருவர் எம்.எல்.ஏ. வாகவோ அல்லது எம்.பி.யாகவோ பதவியேற்கும் போது அவர்களின் உரிமைகள் என்ன என்பது குறித்து பயிற்சி அளிப்பார்கள். எனவே அந்த பயிற்சிகளுக்கு முதல்வர் செல்லவில்லை என்பதை தான் காட்டுகிறது. மேலும் தூத்துக்குடி கலவரத்துக்கு காரணம் சமூக விரோதிகள் என்றும் கூறுகின்றனர்.நாங்களும் அதை தான் கூறுகின்றோம். தமிழகத்தில் சமூக விரோதிகளாக உள்ளவர்கள் ஆட்சி நடத்துவதால் இது போன்ற நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஸ்டெர்லைட் ஆலை மூடும் விவகாரத்தில் நீதிமன்றத்தில் உரிய வாதங்களை எடுத்து வைக்க கூட தமிழக அரசு முன்வரவில்லை.

பொதுமக்கள் தொடர்ந்து 100 நாட்கள் வரையில் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் அவர்களிடம் அமைச்சர்களோ, அதிகாரிகளோ, அல்லது முதல் அமைச்சரோ பேச்சு வார்த்தை நடத்தியிருந்தால் இது போன்று மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டிருக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.#SterliteProtest #kanimozhi
Tags:    

Similar News