செய்திகள்

வளசரவாக்கம் பகுதியில் மொபட்டில் சென்று சங்கிலி பறிப்பில் ஈடுபடும் முதியவர்

Published On 2018-06-21 03:37 GMT   |   Update On 2018-06-21 03:37 GMT
வளசரவாக்கம் பகுதியில் வேட்டி, சட்டை அணிந்து மொபட்டில் வந்து சங்கிலி பறிப்பில் ஈடுபடும் முதியவரை, கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து போலீசார் தேடி வருகின்றனர்.
பூந்தமல்லி:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தனியாக செல்பவர்களிடம் சங்கிலி பறிப்பில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகளவில் நடைபெற்று வருகின்றன. இந்த சம்பவங்களில் சிறுவர்கள், வாலிபர்கள், கல்லூரி மாணவர்கள்தான் ஆடம்பர செலவுக்கு ஆசைப்பட்டு ஈடுபட்டு வந்தனர்.

இவர்கள் தங்களை போலீசார் அடையாளம் காணாமல் இருக்க ஹெல்மெட் அணிந்தும், முகத்தில் துணியை கட்டிக்கொண்டும் கைவரிசை காட்டி வருகின்றனர்.

ஆனால் தற்போது முதியவர் ஒருவர், வளசரவாக்கம் பகுதியில் நூதன முறையில் சங்கிலி பறிப்பில் ஈடுபடும் காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.

வேட்டி, சட்டை அணிந்தும், நெற்றியில் பட்டை அடித்துக்கொண்டும் நீல நிற மொபட்டில் சாலையில் வலம் வரும் அவருக்கு 60 வயதுக்கு மேல் இருக்கும். அந்த நபர், சாலையில் தனியாக நடந்து செல்லும் வயதான பெண்களை குறி வைத்து தனது சங்கிலி பறிப்பு சம்பவத்தை அரங்கேற்றி வருகிறார்.

அவரது வயதை வைத்து யாரும் அவரை சங்கிலி பறிப்பு திருடன் என சந்தேகம் அடையமாட்டார்கள் என்பதால் அவர், ஹெல்மெட் அணியாமலும், முகத்தில் துணி கட்டாமலும் துணிச்சலுடன் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு வருகிறார்.

வளசரவாக்கத்தில் நடந்து சென்ற மூதாட்டியிடம் நகையை பறித்த அவர், உடனடியாக நகையை வாயில் லாவகமாக கவ்விக்கொண்டு மொபட்டில் அங்கிருந்து வேகமாக தப்பிச்சென்று விட்டார். அதன்பிறகுதான் அந்த மூதாட்டிக்கு நகை பறிபோனது தெரியவந்தது.

இதையடுத்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆராய்ந்த போது, அதில் அவர் நீல நிற மொபட்டில் வந்து சங்கிலி பறிப்பில் ஈடுபடும் காட்சி தெளியாக பதிவாகி உள்ளது தெரிந்தது.

அதில் பதிவான அவரது உருவம் மற்றும் மொபட் பதிவெண் ஆகியவற்றை வைத்து அவரை போலீசார் தேடி வருகின்றனர். இளைஞர்களுக்கு சவால் விடும் வகையில் முதியவரும் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டு வருவதால் பெண்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
Tags:    

Similar News