செய்திகள் (Tamil News)

அரசுக்கே உரிய ராஜகோபத்தோடு தூத்துக்குடியில் திட்டமிட்டு துப்பாக்கிச்சூடு - கமல் பேட்டி

Published On 2018-06-21 04:42 GMT   |   Update On 2018-06-21 04:42 GMT
தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது துப்பாக்கி சூடு நடத்தியது பதட்டத்தில் நடத்தியது மாதிரி தெரியவில்லை. அரசுக்கே உரிய ராஜகோபத்தோடு செய்தது போல இருக்கிறது என்று கமல்ஹாசன் கூறினார். #Thoothukudifiring #Kamalhaasan
சென்னை:

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வாரப் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

போராட்டங்களின் போது அப்பாவி மக்கள் ரத்தம் சிந்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். போராட்டம் ஒரு போதும் வன்முறையாக மாறிவிடக் கூடாது.



தூத்துக்குடி போராட்டத்தின் போது எதைப் பற்றியும் யோசிக்காமல் துப்பாக்கி சூடு நடத்தியது போல தெரிகிறது. இது பதட்டத்தில் நடத்திய துப்பாக்கி சூடு மாதிரி தெரியவில்லை. அரசுக்கே உரிய ராஜகோபத்தோடு செய்தது போல இருக்கிறது.

போராட்டங்கள் இல்லாமல் எதுவும் நடக்காது. போராடாமல்தான் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்ததா? வெள்ளைக்காரர்கள் இந்த விளையாட்டு போரடித்து விட்டது என்று நினைத்து சுதந்திரத்தை கொடுத்துவிட்டு போய் விட்டதாக நினைக்கிறார்களா? எனவே போராட்டமே கூடாது என்று சொல்லாதீர்கள். சுட்டுக் கொல்லாதீர்கள். நம்மிடம் உள்ள நிறைய போராட்டங்கள் பழைமை வாய்ந்தவை.

அதனால்தான் மக்கள் நீதி மய்யத்தில் உண்ணாவிரத போராட்டம் கிடையாது என்று அறிவித்துள்ளோம். இன்னும் ஏராளமான புதிய போராட்ட வடிவங்கள் வரவேண்டும். ஆனால் ரத்தம் சிந்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்

விஸ்வரூபம் படத்தின் எதிர்ப்பு அரசியலுக்கு பின்னால் இருந்தது யார்? என்று அனைவருக்கும் தெரியும். மரணம் ஒருவரை எல்லா வகையிலும் குற்றமற்றவராக்கி விடாது. தகாத வார்த்தைகளையெல்லாம் பேசினார்கள்.

ஒரு படத்தின் டிரெயிலர் காட்சிகளை மட்டும் வைத்து முழுப்படத்தையும் விமர்சிக்கக் கூடாது. முஸ்லிம்களை தாக்கி படம் எடுக்க நான் பா.ஜனதா கட்சியிலா சேர்ந்திருக்கிறேன்.

நான் எதை செய்தாலும் அதை தவறு என்று முழக்கமிடுவது ஒரு அரசியல் தான். எல்லா மதத்திலும் நல்லவர்களும் கெட்டவர்களும் இருக்கிறார்கள். பகுத்தறிவாதிகளிலும் கூட அதுபோல உள்ளனர். அரசியலில் சினிமாவும், சினிமாவில் அரசியலும் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

அனைத்து திட்டங்களையும் மக்கள் எதிர்ப்பது தவறு. தூத்துக்குடியை போல சென்னை காமராஜர் துறைமுகத்துக்காக ஒரு ஆற்றையே ஆக்கிரமித்துள்ளனர். முன்னேற்றத்தால் நகரத்துக்கு பாதிப்பு வருவதை அனுமதிக்க முடியாது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பல கோடி மக்களை சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனை நான் இழக்க விரும்பவில்லை. அந்த நிகழ்ச்சியின் மூலமாக ஓரளவுக்கு அரசியல் உரையாடலை நிகழ்த்த முடியும் என்று எண்ணுகிறேன்.

தனிமனித உரிமைகள் எப்போதும் காக்கப்பட வேண்டும். ஆதார் கார்டே வேண்டாம் என்று சொல்லக் கூடாது. அதனை வரையறுக்க வேண்டும். சந்தேகங்களை கேள்விகளாக முன் வைக்க வேண்டும். இந்த வி‌ஷயத்தில் மக்கள் நீதி மய்யம் தீவிரமாக செயல்படுகிறது.

இவ்வாறு கமல் கூறியுள்ளார். #Thoothukudifiring #Kamalhaasan #MakkalNeedhiMaiam
Tags:    

Similar News