செய்திகள்

சிங்காரா வனப்பகுதியில் 4 வயது சிறுத்தைப்புலி பலி

Published On 2018-07-09 16:05 GMT   |   Update On 2018-07-09 16:05 GMT
சிங்காரா வனப்பகுதியில் 4 வயது சிறுத்தைப்புலி இறந்து கிடந்தது. இது தொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மசினகுடி:

கூடலூர், முதுமலை புலிகள் காப்பகம் இணையும் பகுதியில் அடர்ந்த வனம் உள்ளது. நேற்று சிங்காரா வனச்சரகத்துக்குட்பட்ட நார்தன்ஹே பகுதியில் வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது 4 வயதான ஆண் சிறுத்தைப்புலி ஒன்று இறந்து கிடப்பது தெரியவந்தது.

இதையடுத்து முதுமலை புலிகள் காப்பக வெளிமண்டல துணை களஇயக்குனர் புஸ்பாகரன் தலைமையில் வனச்சரகர் காந்தன், வனத்துறை ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர் டேனியல் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் மற்றொரு சிறுத்தைப்புலியுடன் ஏற்பட்ட சண்டையில் படுகாயம் அடைந்து அந்த சிறுத்தைப்புலி இறந்து இருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

கால்நடை டாக்டர்கள் ராஜன், கலைவாணி ஆகியோர் வரவழைக்கப்பட்டு சிறுத்தைப்புலியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் முக்கிய உடற்பாகங்கள் பரிசோதனைக்கு எடுக்கப்பட்டன. இதன் அறிக்கையின் முழு விவரம் கிடைத்த பின்னரே சிறுத்தைப்புலி சாவுக்கான உண்மையான காரணம் தெரிய வரும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

இதனிடையே முதுமலை புலிகள் காப்பகத்தில் கால்நடை டாக்டர் பணியிடம் தொடர்ந்து பல மாதங்களாக காலியாக உள்ளது. இதனால் உடல் நலம் பாதிக்கப்படும் வனவிலங்குகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியாத நிலை காணப்படுகிறது. இதேநிலை கூடலூர் வன கோட்டத்திலும் உள்ளது. இதனால் கால்நடை டாக்டர் பணியிடத்தை உடனடியாக நிரப்ப சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனவிலங்கு நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Tags:    

Similar News