பெரியகுளம் பகுதியில் சுகாதாரமற்ற குடிநீரால் தொற்று நோய் பரவும் அபாயம்
பெரியகுளம்:
பெரியகுளம் மற்றும் வடுகபட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம், தாமரைக்குளம், கள்ளிபட்டி உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சோத்துப்பாறை அணைப்பகுதியில் இருந்து கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த குடிநீர் சுத்திகரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக குடிநீர் கலங்கலாக வருவதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், பொதுவாக மழை காலத்தில்தான் குடிநீர் கலங்கலாக வரும். தற்போது சுத்திகரிக்கப்பட்டு வருவதால் தண்ணீர் நிறம் இன்றியே வந்துகொண்டிருந்தது. ஆனால் திடீரென சில நாட்கள் கலங்கலாக வருகிறது. குழாயில் ஏதும் உடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் கலக்கிறதா? என தெரிய வில்லை.
கலங்கலான நீரால் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. பருவநிலை மாற்றத்தால் இப்பதியில் திடீரென காய்ச்சல், சளி ஏற்பட்டு வருகிறது.
கலங்கலான குடிநீரால் பொதுமக்கள் மேலும் அச்சம் அடைந்துள்ளனர். எனவே திட்ட அதிகாரிகள் ஆ ய்வு செய்து சுகாதாரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.