செய்திகள்

காலாப்பட்டு தனியார் தொழிற்சாலைக்கு கவர்னர் எச்சரிக்கை

Published On 2018-07-14 10:27 GMT   |   Update On 2018-07-14 10:27 GMT
காலாப்பட்டில் சுனாமி குடியிருப்பில் குடிநீர் பற்றாக்குறை நிலவுவதாக வந்த புகாரை தொடர்ந்து கவர்னர் கிரண்பேடி அங்கு சென்று தொழிற்சாலைக்கு எச்சரிக்கை விடுத்தார்.

சேதராப்பட்டு:

காலாப்பட்டில் சுனாமி குடியிருப்பில் குடிநீர் பற்றாக்குறை நிலவுவதாக வந்த புகாரை தொடர்ந்து கடந்த வாரம் கவர்னர் கிரண்பேடி காலாப்பட்டு சுனாமி குடியிருப்பை பார்வையிட்டார்.

மேலும் குடிநீர் பற்றாக்குறைக்கு அங்குள்ள தனியார் தொழிற்சாலை தான் காரணம் என்றும் அங்கு அளவுக்கு அதிகமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதாக வந்த புகாரின் அடிப்படையில் அந்த தொழிற்சாலையை பார்வையிட்டு கவர்னர் கிரண்பேடி ஆய்வு செய்தார்.

அப்போது தொழிற் சாலையில் எவ்வளவு நீர் பயன்படுத்தப்படுகிறது என்ற தகவலை கவர்னர் கேட்ட போது, அது பற்றிய விவரங்கள் அங்கிருந்த அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் தெரியவில்லை.

இதையடுத்து கவர்னர் கிரண்பேடி அடுத்த முறை வரும் போது, சரியான விவரங்களை அளிக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்து சென்றார்.

இந்த நிலையில் இன்று காலை 6.30 மணியளவில் கவர்னர் கிரண்பேடி பொதுப்பணித்துறை மற்றும் வருவாய் துறை, சுற்றுச்சூழல் துறை, அறிவியல் தொழில் நுட்பத்துறை அதிகாரிகளுடன் காலாப்பட்டு தனியார் தொழிற்சாலைக்கு சென்றார். அங்கு மாத்திரை உற்பத்தி செய்யும் பிரிவுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அங்கிருந்த தொழிற்சாலை அதிகாரிகளிடம் இந்த தொழிற்சாலை எப்போது தொடங்கப்பட்டது? மழைநீர் சேகரிப்பு எந்த ஆண்டில் இருந்து செயல்படுத்தப்படுகிறது. என்று அடுக்கடுக்கான கேள்விகளை கவர்னர் கேட்டார்.

நிலத்தடி நீரை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

மேலும் மக்களுக்கு பணத்தை கொடுத்து செலவு செய்வதை விட மழைநீரை சேமிக்க பெரிய குளமோ, குட்டையோ ஏற்படுத்த வேண்டும் என தொழிற்சாலை நிர்வாகத்தினருக்கு அறிவுறுத்தினார். மேலும் இதனை வருகிற 29-ந் தேதி பார்வையிட வருவதாகவும் கவர்னர் கிரண்பேடி எச்சரிக்கை விடுத்தார்.

Tags:    

Similar News