செய்திகள் (Tamil News)

மதுரையில் ஷேர் ஆட்டோவில் சென்ற பள்ளி ஆசிரியையிடம் 55 பவுன் நகை கொள்ளை

Published On 2018-07-24 10:10 GMT   |   Update On 2018-07-24 10:10 GMT
மதுரையில் ஷேர் ஆட்டோவில் சென்ற பள்ளி ஆசிரியையிடம் 55 பவுன் நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Robberycase

மதுரை:

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி காமராஜர் நகரைச் சேர்ந்தவர் பாஸ்டர் விசுவாசராஜா. இவரது மனைவி ராணி (வயது 45). இவர் தேனியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

இவரது மகள் மதுரை அண்ணாநகரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். மகளை பார்ப்பதற்காக ராணி விடுமுறை நாட்களில் மதுரைக்கு வந்து செல்வார்.

சம்பவத்தன்று வீட்டில் இருந்து 55 பவுன் நகையை ஒரு பேக்கில் எடுத்துக் கொண்டு ராணி மதுரைக்கு வந்தார். மகளை பார்ப்பதற்காக சிம்மக்கல்லில் இருந்து ஷேர் ஆட்டோவில் அண்ணா நகருக்கு சென்றார்.

ஷேர் ஆட்டோவில் அளவுக்கு அதிகமாக பயணிகள் இருந்ததை பயன்படுத்திக்கொண்ட 2 பெண்கள், ராணி வைத்திருந்த பேக்கை நைசாக திருடிக் கொண்டு தப்பினான்.

சிறிது நேரம் கழித்து நகை இருந்த பை திருடு போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ராணி அண்ணாநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை திருடியவர்களை தேடி வருகின்றனர்.

மதுரை புதுவிளாங்குடி, அண்ணாதெருவைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி சித்திரைச்செல்வி (47). இவர் நேற்று முனிச்சாலையில் இருந்து கீழவாசலுக்கு ஷேர் ஆட்டோவில் வந்தார்.

அப்போது ஷேர் ஆட்டோவில் அருகில் அமர்ந்திருந்த மர்ம நபர் சித்திரைச்செல்வியின் பர்சை திருடிக் கொண்டு நைசாக தப்பினார். அதில் ரூ.1,500 ரொக்கம், ஏ.டி.எம். கார்டு, வீட்டு சாவி இருந்தது.

இது குறித்து விளக்குத் தூண் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மதுரை முத்துப்பட்டி, பாரதியார் நகர் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் ஈஸ்வர்லால் (வயது 67). இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு சென்னையில் உள்ள மகள் வீட்டுக்குச் சென்று விட்டார்.

இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த வைர மூக்குத்தி, 150 கிராம் வெள்ளி நாணயங்கள் உள்ளிட்ட பொருட்களை திருடிக் கொண்டு தப்பினர்.

கடந்த 22-ந் தேதி வீடு திரும்பிய ஈஸ்வர்லால் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News