செய்திகள்

தடையை மீறி பா.ஜனதா போராட்டம் நடத்த போவதாக தகவல்- 250 பேர் கைது

Published On 2018-07-30 09:26 GMT   |   Update On 2018-07-30 09:26 GMT
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே தடையை மீறி போராட்டம் நடத்த போவதாக வந்த தகவலை அடுத்து கருப்பு முருகானந்தம் உள்பட 250 பேரை போலீசார் கைது செய்தனர்.
முத்துப்பேட்டை:

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஆசாத் நகர் பகுதியில் மீன்மார்க்கெட் உள்ளது. இது இப்பகுதி மக்களுக்கு இடையூறாக இருப்பதால் அதனை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.ஆனால் மீன்மார்க் கெட்டை இடமாற்றம் செய்வது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனை கண்டித்து பா.ஜனதாவினர் மற்றும் பொதுமக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி உள்ளனர். இருந்த போதிலும் மீன்மார்க்கெட் அகற்றுவது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதைத் தொடர்ந்து முத்துப்பேட்டை அருகே உள்ள ஜாம்புவான் ஓடை, அரமங்காடு, தில்லைவிளாகம், கல்லடி கொல்லை வடகாடு உள்ளிட்ட 20 கிராம மக்கள் ஒன்றிணைந்து இன்று ஆர்ப்பாட்டம் நடத்தபோவதாக அறிவித்திருந்தனர்.

ஆனால் இவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த போலீசார் அனுமதி வழங்கவில்லை. இந்த நிலையில் அதை மீறி இன்று மாணவர்கள், பொதுமக்கள், விவசாயிகள் என அனைவரும் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்துவதாக தகவல் பரவியது.

இதனால் தஞ்சை சரக டி.ஐ.ஜி.லோகநாதன் உத்தரவின் பேரில் திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் தலைமையில் 2 துணை டி.எஸ்.பி., 5 டி.எஸ்.பி.க்கள், 10 இன்ஸ்பெக்டர்கள், பயிற்சி காவலர்கள் என 350-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் பா.ஜனதா மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், ஒன்றிய தலைவர் ராஜேந்திரன், முன்னாள் ஒன்றிய தலைவர் ஆறுமுகம் மற்றும் நிர்வாகிகள் ஜெயபால், நித்யானந்தம், ராமு, பாலமுருகன், செந்தில் உள்பட 250 பேரை முன்னெச்சரிக்கையாக முத்துப்பேட்டை போலீசார் கைது செய்தனர்.

மேலும் போராட்டக்காரர்கள் அத்து மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு விட கூடாது என்று பல அடுக்கில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சம்பவ இடத்துக்கு திருத்துறைப்பூண்டி மகேஸ்குமார், மன்னார்குடி ஆர்.டி.ஓ. பத்மாவதி ஆகியோரும் சென்று பார்வையிட்டனர்.

முத்துப்பேட்டை பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #tamilnews
Tags:    

Similar News