செய்திகள் (Tamil News)

முதல்-அமைச்சரின் செயல்பாட்டால் மாநில வளர்ச்சிக்கு பாதிப்பு ஏற்படும்- கிரண்பேடி குற்றச்சாட்டு

Published On 2018-08-06 10:02 GMT   |   Update On 2018-08-06 10:02 GMT
முதல்-அமைச்சர் நாராயணசாமியின் செயல்பாட்டால் மாநில வளர்ச்சிக்கு பாதிப்பு ஏற்படும் என்று கவர்னர் கிரண்பேடி குற்றம்சாட்டியுள்ளார். #PuducherryGovernor #Kiranbedi #Narayanasamy
புதுச்சேரி:

கவர்னர் கிரண்பேடி அடிக்கடி அதிகாரிகளை கூட்டி ஆலோசனை நடத்துகிறார். பல்வேறு உத்தரவுகளையும் பிறப்பிக்கிறார்.

உத்தரவுகளை செயல்படுத்தாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் சமீபத்தில் கூறி இருந்தார்.

இதற்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி எதிர்ப்பு தெரிவித்து நேற்று பேட்டி அளித்தார். கவர்னருக்கு அதிகாரிகளை கூட்டி ஆலோசனை நடத்த அதிகாரம் இல்லை. அவர் அதிகாரிகளை மிரட்டுகிறார். இந்த போக்கை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறி இருந்தார்.

இது சம்பந்தமாக கவர்னர் கிரண்பேடி சமூக வலைதளம் மூலமாக கருத்து வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கவர்னர் அலுவலக பணிகள், கடமைகள், பொறுப்புகள் தொடர்பாக முதல்-அமைச்சர் நாராயணசாமி தொடர்ந்து எதிரான கருத்துக்களை கூறுகிறார்.

கவர்னர், அதிகாரிகளுக்கு இடும் உத்தரவுகளை சீர் குலைக்கும் வகையில் அவருடைய கருத்துக்கள் இருக்கின்றன. இப்படி அவர் சொல்வதால் மாநில வளர்ச்சியின் வேகம் பாதிக்கும் என்பதை அவர் உணராமல் இருக்கிறார் என நான் கருதுகிறேன்.


மாநில வளர்ச்சிதான் அவருக்கு முதன்மையானது என்று கருதினால் இது போன்ற கருத்துக்களை அவர் தெரிவிக்க கூடாது.

கவர்னர் அலுவலகத்துக்கு என்னென்ன பொறுப்புகள் உள்ளது என்பது சட்டத்திலும், விதிகளிலும் தெளிவாக கூறப்பட்டுள்ளது. அதை தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் படித்து பார்க்கலாம்.

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு என்பது டெல்லி மாநிலத்துக்காக சொல்லப்பட்டது. அந்த தீர்ப்பு புதுவைக்கு பொருந்தாது.

எல்லா நிலைகளிலும் புதுவையை நம்பர்-1 யூனியன் பிரதேசமாக கொண்டு வர வேண்டும் என்பதுதான் எனது திட்டம். கவர்னர் மாளிகையை பொறுத்த வரை சட்டத்தின்படியும், விதிகள்படியும் எங்கள் பணிகளை மக்களுக்காக அதிகபட்ச அளவுக்கு செய்வோம்.

இந்த பணி எப்போதும் தொடரும். மக்கள் மாளிகையாக கவர்னர் மாளிகை இருக்கும். அதிகாரிகளும் கவர்னரின் பணிகளை உணர்ந்து இருக்கிறார்கள்.

முதல்-அமைச்சரின் தகவல்கள் அதிகாரிகளை குழப்பத்தில் தள்ளுகிறது. இது, மாநில வளர்ச்சிக்கு சாதகமாக இருக்காது.

கவர்னரின் உத்தரவு என்பது தனிப்பட்ட கிரண்பேடியின் உத்தரவு அல்ல. அது, கவர்னர் மாளிகையின் உத்தரவு. அரசியல் சாசன சட்டத்தின்படி செயல்பாடுகள் தொடரும்.

அனைவரும் ஒன்றிணைந்து வளர்ச்சிகளை ஏற்படுத்துவோம். பழைய குறைபாடுகளை களைந்து முன்னேற்றுவதே நோக்கமாக இருக்க வேண்டும்.

இவ்வாறு கவர்னர் கிரண்பேடி கூறியுள்ளார். #PuducherryGovernor #Kiranbedi #Narayanasamy
Tags:    

Similar News