செய்திகள்

கபிஸ்தலம் வங்கியில் போலி நகைகள் அடகு வைத்து ரூ.6 கோடி மோசடி- விவசாய சங்கத்தினர் புகார்

Published On 2018-08-07 12:06 GMT   |   Update On 2018-08-07 12:06 GMT
தஞ்சை மாவட்டம் கபிஸ்தலத்தில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் போலி நகைகள் அடகு வைத்து ரூ.6 கோடி மோசடி செய்தததாக விவசாய சங்கத்தினர் புகார் அளித்துள்ளனர்.
கும்பகோணம்:

தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் சுவாமிமலை விமலநாதன் மற்றும் தலைவர் சின்னதுரை ஆகியோர் கும்பகோணம் உதவி கலெக்டர் பிரதீப் குமாரை நேரில் சந்தித்து இன்று ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

தஞ்சை மாவட்டம் கபிஸ்தலத்தில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் வாடிக்கையாளர்களாக உள்ளனர். இந்த வங்கியில் விவசாயிகள் வேளாண்மை நகை கடன் வேளாண் பயிர் கடன் எந்திரக் கருவிகள் பண்ணை திட்டங்களுக்கான கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் விவசாயத்துக்கு சம்பந்தம் இல்லாத நபர்களுக்கு விவசாய கடன்கள் வழங்கப்படுவதாக புகார் வந்த வண்ணம் இருந்தது. இதற்கிடையே வங்கிக்கு புதிதாக பொறுப்பேற்ற அலுவலர்கள் வங்கியில் அடகு வைக்கப்பட்ட நகைகளை திடீர் ஆய்வு செய்து பார்த்தனர். அப்போது வங்கி ஊழியர்கள் போலி நகைகளை விவசாயிகள் பெயரில் பல கோடி ரூபாய்க்கு அடகு வைத்து மோசடி செய்திருப்பது தெரிய வந்தது. சுமார் ரூ.6 கோடி வரை மோசடி நடைபெற்றுள்ளது என தெரியவருகிறது.

எனவே இந்த மோசடி குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரை செய்ய வேண்டும். அவ்வாறு சி.பி.ஐ. விசாரணைக்கு வங்கி நிர்வாகம் ஒத்துழைக்காவிட்டால் வங்கியின் முன் விவசாயிகள் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. #tamilnews
Tags:    

Similar News