செய்திகள்

மேட்டூர் அணை 2வது முறையாக நாளை நிரம்ப வாய்ப்பு

Published On 2018-08-10 04:28 GMT   |   Update On 2018-08-10 04:28 GMT
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இருந்து 60 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டால் மேட்டூர் அணை நாளை மாலைக்குள் 2-வது முறையாக மீண்டும் நிரம்ப வாய்ப்பு உள்ளது. #MetturDam
மேட்டூர்:

கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மீண்டும் கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் மீண்டும் நிரம்பின.

இதனால் நேற்று முன்தினம் கர்நாடக அணைகளில் இருந்து உபரிநீர் 70 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. பின்னர் தண்ணீர் திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்பட்டது.

இன்று காலை கபினி அணையில் இருந்து 80 ஆயிரம் கனஅடி தண்ணீரும், கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 63 ஆயிரம் கன அடி தண்ணீரும் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த தண்ணீர் நேற்றிரவு தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவை கடந்து ஒகேனக்கலை வந்தடைந்தது. இதனால் ஒகேனக்கலில் நேற்று காலை 9 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்றிரவு 8 மணிக்கு 18 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இன்று காலை நீர்வரத்து 60 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.

இதனால் ஒகேனக்கல் மெயின்அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மெயின்அருவி உள்ளிட்ட அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நீர்வரத்து அதிகரித்துள்ளதை காவிரி கரையில் நின்று சுற்றுலா பயணிகள் வேடிக்கை பார்த்து வருகிறார்கள்.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. இதனால் நேற்று காலை 8 ஆயிரத்து 311 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 16 ஆயிரத்து 969 கன அடியாக அதிகரித்தது. அணையில் இருந்து 30 ஆயிரம் கன அடி தண்ணீர் டெல்டா பாசனத்திற்காக வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் இன்று காலை 116.85 அடியாக உள்ளது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இன்று பிற்பகல் 60 ஆயிரம் கன அடியை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி தண்ணீர் வரும் பட்சத்தில் அணையில் இருந்து இதே அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டால் மேட்டூர் அணை நாளை மாலைக்குள் 2-வது முறையாக மீண்டும் நிரம்ப வாய்ப்பு உள்ளது.

இதற்கிடையே மத்திய நீர்வள ஆணையத்தின் செயற்பொறியாளர் சரவணன் தமிழக அரசுக்கும், 6 மாவட்ட கலெக்டர்களுக்கும் எச்சரிக்கை கடிதத்தை அனுப்பி உள்ளார்.

அதில் காவிரி கரையோரம் உள்ள பகுதிகளில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், அணைகளில் இருந்து திறக்கப்படும் நீர் தொடர்பாக அணைக்கு கீழ் பகுதியில் உள்ள மக்களுக்கும், தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறி உள்ளார்.


இதை தொடர்ந்து கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் காவிரி கரையோரம் வசிக்கும் மக்களுக்கு தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. வெள்ள அபாய எச்சரிக்கை குறித்த துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது.

கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக ஒகேனக்கல் மெயின் அருவிக்கு செல்லும் வழியில் உள்ள பாதையில் கேட் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. அதன் அருகில் போலீசார் மற்றும் ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நாளை ஆடி அமாவாசை என்பதாலும், விடுமுறை நாள் என்பதாலும் லட்சக்கணக்கில் சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லுக்கு வருவார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது. ஒகேனக்கல்லில் தர்ப்பணம் கொடுக்க நாகர்கோவில் மற்றும் முதலைப்பண்ணை அருகே 2 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அங்கே தர்ப்பணம் கொடுத்து விட்டு மெயின் அருவிக்கு சிறிய கால்வாய் போல் தண்ணீர் வரும் இடத்தில் பக்தர்கள் குளிக்குமாறும், கரைபுரண்டு ஓடும் காவிரி ஆற்றில் யாரும் குளிக்க வேண்டாம் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

இன்று காலை முதல் ஏரியூர் அருகே உள்ள நாகமறையில் இருந்து சேலம் மாவட்டம் பண்ணவாடி பரிசல் துறைக்கு இயக்கப்பட்டு வந்த பரிசல் மற்றும் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

காவிரி கரையோரத்தில் உள்ள ஊட்டமலை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக தங்க சமூக நலக்கூடங்கள் மற்றும் திருமண மண்டபங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பட உள்ளதால் மேட்டூர் அருகே உள்ள தங்கமாபுரி பட்டணம், சேலம் கேம்ப், தொட்டில்பட்டி, எடப்பாடி, சங்ககிரி தாலுகா பகுதிகளில் காவிரி கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு தண்டோரா மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் காவிரி கரையோர பகுதிகளில் அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். மேலும் ஆறுகளில் குளிப்பதையும், புகைப்படங்கள் எடுப்பதையும் தவிர்க்க வேண்டும் என்று கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. #MetturDam
Tags:    

Similar News